அடையாள அட்டையைத் திருப்பித் தருக: ஐஜிபிக்கு வேதா கோரிக்கை

இந்திய மலேசியர்களிடையே ஓர் எழுச்சியை உண்டாக்கிய இண்ட்ராபின் தலைவர் என்ற போதிலும் பி.வேதமூர்த்தி, இன்றைய நிலையில் ஒரு நாடற்ற மலேசியர் போன்றுதான் இருக்கிறார்.

நான்கு ஆண்டுகள் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்ந்துவிட்டு ஆகஸ்ட் முதல் நாள் மலேசியா திரும்பி வந்த வேதமூர்த்தி, மைகார்ட் உள்பட தமக்குச் சொந்தமான  100 ஆவணங்கள் போலீஸ் வசமிருப்பதாகக் கூறினார்.

“2007-இல் போலீஸ் என் அலுவலகத்தில் அதிரடிச் சோதனை நடத்தியபோது, நான் நாட்டில் இல்லை…… என் மைகார்ட், பிறப்புச்சான்றிதழ், பள்ளி, பட்டப்படிப்புச் சான்றிதழ்கள், மலேசிய வழக்குரைஞர் மன்றச் சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரங்கள், பல கோப்புகள் முதலியவற்றை அவர்கள்தான் வைத்துள்ளனர்”,என்றாரவர்.

2007 நவம்பர் 19-இல், வேதமூர்த்தி மற்றும் அவரின் தமையனார்  பி,உதயகுமார்(இடம்) ஆகியோரின் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்திய போலீசார் இண்ட்ராப் ஆர்ப்பாட்டத்துடன்  தொடர்புகொண்ட பல பொருள்களை எடுத்துச் சென்றனர்.

2007, நவம்பர் 25-இல் இண்ட்ராப் பேரணிக்குப் பின்னர் போலீசார் சிரம்பானில் இருந்த வேதமூர்த்தியின் அலுவலகத்தில் மீண்டும் ஒரு முறை சோதனை மேற்கொண்டு அவரது தனிப்பட்ட ஆவணங்கள் பலவற்றைக் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்கள் தம்மிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று வேதமூர்த்தி ஐஜிபி இஸ்மாயில் ஒமாரைக் கேட்டுக்கொண்டார்.

கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை

“போலீஸ் எதையெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதை எழுதிக்கூட கொடுக்கவில்லை.

“மைகார்ட் தொலைந்துபோனால் போலீசில் முறையிடுவதுதான் வழக்கம்.ஆனால், அதைப் பிடித்து வைத்திருப்பவர்களே போலீஸ்காரர்கள்தான்”, என்றாரவர்.

2008-இலேயே, மைகார்ட் பற்றியும் மற்ற ஆவணங்கள் பற்றியும் எழுதிக் கேட்டதாகவும் ஆனால், எவ்வித பதில் கிடையாது என்றும் வேதமூர்த்தி கூறினார். 

“அடையாள அட்டையின்றி நடமாடிக்கொண்டிருக்கிறேன்….இப்போது வேலையின்றியும் இருக்கிறேன். மீண்டும் தொழில் செய்ய என் வழக்குரைஞர் மன்றச் சான்றிதழ் தேவை”.

மலேசியா திரும்பியவுடன், உதயகுமாரிடமிருந்து இண்ட்ராப் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வேதமூர்த்தி,எதிர்வரும் பொதுத் தேர்தலில் அந்த இயக்கம் கட்சி-சார்பற்ற வியூகமொன்றைப் பின்பற்றும் என்றார்.

இது, தேர்தலின்போது மக்கள் உரிமைக் கட்சியின் சார்பில் வேட்பாளர்களைக் களம் இறக்கும் உதயகுமாரின் திட்டத்துக்கு முரணாக உள்ளது.அப்படி என்றால் இருவருக்குமிடையில் பிளவா?

சகோதரர்களுக்கிடையில் பிளவு என்று கூறப்படுவதை மறுத்த வேதமூர்த்தி இருவரும் இப்போதைக்கு வெவ்வேறு வியூகங்களைப் பின்பற்றப்போவதாகக் கூறினார்.