பெர்சே 3.0 பேரணி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொள்வது “மேலோட்டமானது, ஆதாரமற்றது” என முன்னாள் புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி கூறியிருக்கிறார்.
நஜிப் நம்ப முடியாத தகவல் அடிப்படையில் அந்த எண்ணத்தை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என பாவ்சி கடந்த வெள்ளிக்கிழமை தமது இல்லத்தில் வழங்கிய பேட்டியில் சொன்னார்.
“நிகழ்ந்ததை வைத்துப் பார்க்கும் போது பிரதமர் விடுத்த அறிக்கை மேலோட்டமானது என நான் கூற முடியும். அது மிகவும் மேலோட்டமானது. தெளிவான உண்மை நிலைகளை அடிப்படையாக் கொண்டிருக்கவில்லை.”
“அவர் ஒரு வேளை உறுதி செய்யப்படாத தகவல்கள் அடிப்படையில் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம்,” என கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றியுள்ள பாவ்சி சொன்னார்.
அந்தப் பேரணி, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பக்காத்தான் ராக்யாட் தீட்டிய அரபு எழுச்சி பாணியிலான முயற்சி எனப் பிரதமர் கூறியுள்ளது பற்றி பாவ்சி கருத்துரைத்தார்.
அந்தப் பேரணி கடுமையாக ஒடுக்கப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு நஜிப் அந்தக் காரணத்தைப் பயன்படுத்தியுள்ளார். பேரணியில் நிகழ்ந்த வன்முறைகளின் போது காயமடைந்த பல ஆர்ப்பாட்டக்காரர்களும் நிருபர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் பொது ஒழுங்கைப் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தின் அடிப்படையில் போலீசார் அமைதியான கூட்டங்களுக்கான உரிமையை அடிக்கடி மறுத்து வந்துள்ளனர்.
ஆனால் நடப்புச் சூழ்நிலையில் அதே காரணத்தைப் பயன்படுத்த முடியாது என்றார் அவர். காரணம் மக்கள் முதிர்ச்சி அடைந்துள்ளனர். திறந்த மனப் போக்கைக் கொண்டுள்ளனர் என பாவ்சி சொன்னார்.
“நஜிப்பின் கருத்துக்கள் தொடர்பில் நாம் நியாயமாக நடந்து கொள்ள விரும்பினால் பெர்சே-யின் கருத்துக்களையும் நாம் செவிமடுக்க வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.
பல சாலை ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ள டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைவராகவும் பாவ்சி ஒரு காலத்தில் பணியாற்றியுள்ளார்.