முஸ்லிம்கள் டிஏபி-யை ஆதரிப்பது பாவம் என கூறிக் கொள்ளும் கட்டுரையை வெளியிட்ட உத்துசான் மலேசியா மீது பினாங்கு டிஏபி போலீஸில் புகார் செய்துள்ளது.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக உத்துசானை நீதிமன்றங்கள் இரண்டு முறை தண்டித்துள்ள போதிலும் அந்த மலாய் நாளேடு இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என லிம்-மின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி கூறினார்.
டிஏபி “சட்டவிரோதமானது, அரசமைப்புக்கு முரணானது, அதன் உறுப்பினர்கள் இஸ்லாத்தின் மீது பகைமை கொண்டுள்ள மத நம்பிக்கையற்றவர்கள்” என்ற தோற்றத்தைத் தரும் வகையில் அதன் மீது அவதூறு வீசும் பொருட்டு அரசியல் நோக்கங்களுக்காக அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது என ஜைரில் குறிப்பிட்டார்.
அதற்கு மாறாக டிஏபி சட்டத்தின் கண்களில் சட்டப்பூர்வமானது, நீதி, நியாயம், உண்மை, சமம், ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் கொள்கைகள் அமைந்துள்ளன என அவர் மேலும் சொன்னார்.
“டிஏபி தனது 46 ஆண்டு கால வரலாற்றில் தடை செய்யப்படவில்லை அல்லது பதிவு ரத்துச் செய்யப்படவும் இல்லை. அரசமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சியைக் கொண்ட மலேசிய நாடாளுமன்ற ஜனநாயக மரபுக்குள் அது எப்போதும் இயங்கி வந்துள்ளது,” என்றார் அவர்.
உத்துசான் மலேசியாவின் முதல் பக்கத்தில் “Haram sokong DAP” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட பரபரப்பான செய்தியின் அடிப்படையில் அந்தப் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
அது தனது ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியீட்டின் ஐந்தாம் பக்கத்தில் இஸ்லாமிய நாட்டையும் ஹுடுட் சட்டங்களையும் வெளிப்படையாக நிராகரிக்கும் ஒரு கட்சியை முஸ்லிம்கள் ஆதரிப்பது பாவம் என அது குறிப்பிட்டது.
எந்த சமயத்திற்கும் டிஏபி பகைவனாக இருந்தது இல்லை என்றும் கூட்டரசின் அதிகாரத்துவ சமயமாக இஸ்லாத்தை நிலை நிறுத்தியுள்ளது என்றும் அதே வேளையில் மற்ற சமயங்களின் சுதந்திரத்தையும் மதிக்கிறது என்றும் ஜைரில் தெரிவித்தார்.
ஜாலான் பட்டாணி வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகாரைச் சமர்பித்த அவருடன் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் எய்க்-கும் சென்றிருந்தார்.