ஈரானில் பூகம்பம்! பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பத்தில், 250 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் அஜர்பைஜான் எல்லையையொட்டிய தப்ரிஸ் நகரில் நேற்று முன்தினம், 6.4 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அகர், ஹரிஸ், வர்சாக்வான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால், ஆறு கிராமங்களில் உள்ள மண் வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 250 பேர் பலியாகியுள்ளனர்; 1,800 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பூகம்பத்தை தொடர்ந்து 50 முறை நில அதிர்வு காணப்பட்டதால், மக்கள் இரவு முழுக்க சாலைகளில் தங்கியிருந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு செம்பிறை சங்கத்தினர் கூடாரங்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் முஸ்தபா முகமது குறிப்பிடுகையில், “இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை முடித்துக் கொண்டு விட்டோம். பலியானவர்கள் ஒட்டு மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். வரக்கூடிய காலங்கள் மழை மற்றும் குளிர் காலம் என்பதால், வீடிழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித் தரும்படி, அதிபர் அகமது நிஜாத் உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.கடந்த 2003ம் ஆண்டு, பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில், 31 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.