கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தல்: முஸ்லிம் கட்சிகளிடையே அடிதடி!

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடந்த திங்கட்கிழமை(13.8.12) இரவு நிலவிய அமைதியற்ற சூழலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் பிரச்சார பணிமனையொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

அட்டாளச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பணிமனை தீ வைக்கப்பட்டுள்ளதோடு மோட்டார் வாகனங்கள் உட்பட சில வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

தமது தேர்தல் பிரச்சார பணிமனைகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் பொறுப்பு என்று ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் மாநில வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம.எஸ்.உதுமான்லெப்பை குற்றஞ்சாட்டினார்

அந்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் இந்த சம்பவத்தை நேரில் கண்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

அட்டாளச்சேனைப் பிரதேசத்தில் தமது வாகனத் தொடரனி மீது தாக்குதல் இடம் பெற்றதையடுத்து அந்த பகுதியில் சுமூகமற்ற சூழ்நிலை உருவானதாகக் கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம்; ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி காரியாலயங்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமது கட்சி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியான தேசிய காங்கரஸைச் சேர்ந்தவர்களே இதனை செய்து விட்டு தம் மீது குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறினார்.

அக்கறைப்பற்று பிரதேசத்தில் காவல்துறையினர் பக்க சார்பான முறையில் நடந்து கொள்வதால் தங்களால் சுதந்திரமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலை அந்த பிரதேசத்தில் தற்போது உருவாகியுள்ளதாக கல்முனையில் நடை பெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அவர் கூறினார்.

TAGS: