மலேசியாவின் மாநில, மத்திய அரசாங்கங்களின் கொள்கைகளும் நடைமுறைகளும் மலேசிய இந்தியர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் குறைபாடுகளை கையாள்வதில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றன என்று ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி அவரது அறிக்கையில் கூறுகிறார்.
ஓரங்கட்டப்பட்ட பெரும்பாலான மலேசிய இந்திய தோட்டத் தொழிலாளர்கள், சபா சரவாக் சமூகத்தினர் மற்றும் இந்நாட்டு சுதேசிகளான ஓராங் அஸ்லி ஆகியோர் இந்நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல புறந்தள்ளப்பட்டு வஞ்சிக்கப்பட்டிருகிறார்கள்.
சுதந்திரத்திற்கு முன்னரும், சுதந்திரமடைந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து மலேசியாவின் 70 விழுக்காடு உள்ளநாட்டு உற்பத்தி மலேசிய இந்தியர்களையே சார்ந்திருந்தது என்பது ஆதாரபூர்வமான வரலாறாகும். எனினும் 70 ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், 80 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் சர்வாதிகார செயல் முறைகளால் சுமார் 8 லட்சம் மலேசிய இந்தியர்கள் தோட்டங்களை விட்டு பரிதாபமாக, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சுமார் மூன்றரை இலட்சம் பேர் முறையான பிறப்பு பத்திரம் இல்லாமல் இன்று நாடற்றவர்களாக சொந்த மண்ணிலேயே வாழும் அவலத்திற்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
துரிதமாக முன்னேற்றம் கண்டுக்கொண்டிருந்த மலேசியாவின் வளர்ச்சியில் பங்கு பெறச் செய்யும் வகையில் எவ்விதமான நிர்வாக செயல்பாடுகளையும் அரசாங்கம் அவர்களுக்காக மேற்கொள்ளவில்லை என்பது வருத்ததிற்குரியதாகும்.
இதே கால கட்டத்தில் மலாய் சமூகத்தினரின் மேம்பாட்டுக்காகவும் வளர்ச்சிக்காகவும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பல்வேறு மேம்பாட்டு ஆணையங்களை உருவாக்கி செயல்படுத்தத் துவங்கின. மத்திய நில மேம்பாட்டு ஆணையம் (FELDA), மத்திய நில ஒருங்கிணைப்பு மற்றும் மறு குடியேற்ற ஆணையம் (FELCRA), ரப்பர் சிறுதொழில் அபிவிருத்தி ஆணையம் (RISDA ), மலேசிய மக்கள் நம்பிக்கை மன்றம் (MARA), மத்திய விவசாய விற்பனை ஆணையம் (FAMA), தென்கிளந்தான் மேம்பாட்டு ஆணையம் (KESEDAR), தென்கிழக்கு பகாங் மேம்பாட்டு ஆணையம் (DARA), கெடா மேம்பாட்டு ஆணையம் (KEDA), பினாங்கு வட்டார மேம்பாட்டு ஆணையம் (PERDA),தென்கிழக்கு ஜொகூர் மேம்பாட்டு ஆணையம் (KEJORA), திரங்கானு வட்டார மேம்பாட்டு முகமை (KETENGAH) போன்ற அமைப்புகளின் மூலம் மலாய் சமூகத்தினருக்கு தெளிவான மேம்ப்பாட்டு திட்டங்களை அமல்படுத்திய மாநில மற்றும் மத்திய அரசுகள், தோட்டதிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஏழை இந்தியர்களுக்கென இப்படி ஒரு திட்டத்தைக்கூட கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. நீண்டு கொண்டே போகும் மலாய் காரர்களுக்கான முன்னேற்ற திட்டத்தின் சிறு பட்டியல்தான் இது.
பல்லின மலேசியாவில் அங்கம் வகிக்கும் மலாய் சகோதரர்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டு காலத்திற்கேற்ப செயல்முறை படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் நியாமானவைகள். அவற்றை ஹிண்ட்ராப் குறை கூறவில்லை. சரியான காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களினால் சுமார் 35 – 40 ஆண்டுகள் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு பங்களித்ததற்கு பிரதிபலனாக இன்று FELDA போன்ற நில உரிமையாளர்கள் கணிசமான பண மற்றும் இதர வகையான ஆதாயங்களை அனுபவிக்கிறார்கள். அதே சமயத்தில் 200 ஆண்டுகளாக இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உழைத்த 8 இலட்சம் மலேசிய இந்தியர்கள் ஏன் இவ்வாறான திட்டங்களில் இருந்து புறந்தள்ளப்பட்டார்கள் என்பதே ஹிண்ட்ராப் அமைப்பின் வருத்தமாகும்.
காலம் காலமாக உழைத்து இறுதியில் உழைப்புக்கேற்ற நியாயமான இழப்பீடு ஏதும் பெறாமல், மாற்று வீட்டு வசதிகள் செய்து தரப்படாமல்,வருமானம் ஈட்டுவதற்கு வேறு வேலையோ அல்லது மாற்று தொழிலுக்கு ஏற்ற திறன் பயிற்சிகளோஅளிக்கப்படாமல், மீள்குடியேற்ற திட்டங்கள் ஏதும் இல்லாமல் பெருவாரியாக விரட்டியடிக்கப்பட்ட ஒரே சமூகம் இந்திய சமூகம்தான்.
இதன் விளைவாகவே சட்ட விரோதமாக புறம்போக்கு நிலங்களில் வீடுகளையும் ஆலயங்களையும் நிறுவ வேண்டிய நிர்பந்தம் மலேசிய இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பலன் உலகின் வேறெந்த பகுதியிலும் இடம் பெயர்ந்த எந்த சமூகமும் எதிர்கொள்ளாத சமூக பிரச்சனைகளுக்கு மலேசிய இந்தியர்கள் பலியாகி கொண்டிருக்கிறார்கள்.
இப்படி வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்களின் வாரிசுகள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் கேட்டுக்கொள்கிறது. வஞ்சிக்கப்பட்ட இந்திய சமூகத்தையும் தொழிலாளர் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் மேம்பாட்டுகென்று வகுக்கப்பட்ட அனைத்து வகையான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களிலும் இணைத்துகொள்ள வேண்டும் என்று ஹிண்ட்ராப் வலியுறுத்துகிறது. உதட்டளவிலான “மாற்றமும்” “நம்பிக்கையும்” ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயித்து விடமுடியாது.
எனவே பாரிசான் நேசனல் மற்றும் பக்காத்தான் ராக்யாட் இரு சாராரிடமும் தங்கள் வசமுள்ள மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஆளுமைக்கு உட்டபட்ட அதிகாரத்தின் வழி, அரசியல் தந்திரங்களைப் பின்தள்ளி, ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட சமூகத்தினரின் நலனை முன்வைத்து அனைவரும் பயனடையும் வகையில் சமத்துவமான திட்டங்களை வகுத்து அறிவிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் வேண்டுகோள் விடுக்கிறது.
மலேசியர்கள் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டுமே தவிர அரசாங்கத்தின் பரிவை எதிர்பார்த்தல்ல என்று வேதமூர்த்தி தமது ஊடக அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறார்.