பினாங்கு கெராக்கான் சாபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறியிருப்பதன் தொடர்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது.
இப்படிப்பட்ட கட்சித்தாவலை ஆதரிப்பதாக லிம் இதுவரை எவ்வித அறிகுறியும் காட்டவில்லை என்று குறிப்பிட்ட மாநில கெராக்கான் மனித உரிமை மற்றும் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் பல்ஜிட் சிங், கட்சித்தாவல் என்பது “தார்மீக ரீதியில் தப்பு” என்றார்.
அரசாங்கம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.கட்சித்தாவல்களைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிடக்கூடாது என்று பல்ஜிட் விளக்கினார்.
ஈராண்டுகளுக்குமுன் செப்டம்பர் 16-இல் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ரக்யாட்டுக்கு மாறி வருவார்கள் என்று அறிவித்தபோதும் லிம் மெளனமாகத்தான் இருந்தார்.
அன்வாரின் செப்டம்பர் 16 திட்டத்தை எதிர்க்கும் துணிச்சல் டிஏபி தலைவர் கர்ப்பால் சிங்குக்கு மட்டுமே இருந்தது என்று கூறி அதற்காக அவரை பல்ஜிட் பாராட்டினார்.
“அப்பிரதிநிதிகள் கட்சிமாற அன்வார் எவ்வளவு கொடுத்தார்?அவ்விசயத்தில் லிம் மெளனமாக இருப்பது ஏன்”,என நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் பல்ஜிட் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சித் தாவுவதைத் தடுக்க அரசாங்கம் ஏன் சட்டம் கொண்டுவர மாட்டேன் என்கிறது என்பது தமக்குப் புரியவில்லை என்று அண்மையில் லிம் கூறியதாக வெளிவந்த செய்தி குறித்து எதிர்வினையாற்றியபோது பல்ஜிட் இவ்வாறு கூறினார்.
பிஎன் கட்சித்தாவலை ஆதரிப்பதால் அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் லிம் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சாபாவில் பிஎன் எம்பிகள் இருவர் கட்சியிலிருந்து விலகியதை அடுத்து அக்கட்சி அவர்களைத் “தவளைகள்” என்று முத்திரை குத்தியது பற்றிக் கருத்துரைத்த லிம்,“அப்படிக் குறைகூறுவது ஏன் என்று தெரியவில்லை.இந்தக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருவதே பிஎன்தானே” என்று கூறியதாகவும் தெரிகிறது.
கட்சித்தாவலால் குழப்பம் ஏற்படும்
பல்ஜிட்டைப் பொறுத்தவரை கட்சிவிட்டு கட்சி தாவும் ஒருவர், பிஎன்னைச் சேர்ந்தவரோ பக்காத்தானைச் சேர்ந்தவரோ அவர் ஓர் “அரசியல் தவளை”தான்.
கட்சித்தாவலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு இரு தரப்புகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றாரவர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பல்ஜிட் தலைமையிலான கெராக்கான் குழுவொன்று, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் கட்சிமாறினால் அவரது தொகுதி இயல்பாகவே காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழுவிடம் பரிந்துரைத்தது.
தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கவிழ்ப்பு எதுவும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த அப்படியொரு பரிந்துரை செய்யப்பட்டதாக பல்ஜிட் கூறினார்.
2009-இல், பேராக் சட்டமன்றத்தில் மூன்று பக்காத்தான் பிரதிநிதிகள் தங்கள் கட்சிகளைவிட்டு விலகி பிஎன்னுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அம்மாநிலத்தில் பாஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்து பிஎன் ஆட்சியைக் கைப்பற்றியது.