எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியை கைப்பற்றலாம் :TNA

இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கிழக்கு மாநில சட்டமன்ற தேரதலில் 35 தொகுதிகள் உள்ளன. நாம் பெரும்பான்மையை பெறவேண்டுமானால் 17 தொகுதிகளை வெல்ல வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் திருகோணமலையில் 4 தொகுதிகளையும் அம்பாறையில் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற முடியுமென நாம் நம்புகிறோம்” என அவர் கூறினார்.

இந்த 11 தொகுதிகளுடன் மேலும் இரண்டு போனஸ் தொகுதிகள் கிடைக்கும். அதன் மூலம் எமக்கு 13 தொகுதிகள் கிடைக்கும். ஐ.தே.க. 7 தொகுதிகளில் வெற்றிபெறுமேயானால் நாம் 20 தொகுதிகளை பெறமுடியும். இதன் மூலம் கிழக்கு மாநில சட்ட மன்ற பெரும்பான்மை பலம் கொண்ட ஐ.தே.க.- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சியை நிறுவலாம் என சம்பந்தன் தெரிவித்தார்.

“ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற முடியும் என்று நாம் நம்ப வில்லை. அவை இலங்கை அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன. எனவே நாம் 20 தொகுதிகளை கைப்பற்றினால் இலகுவாக கிழக்கு மாநில முதல்வர் பதவியை பெற முடியும். அதன் மூலம் எமது பலத்தை உலகிற்குக் காட்ட முடியும். எமக்குள்ள மக்கள் ஆணையை உலகிற்கு நிரூபிக்க இது நல்லதொரு சந்தர்ப்பம். அதற்கு உங்களின் வாக்குகளை எமக்கு அளிப்பீர்கள்” என்று நம்புகிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

TAGS: