ஹூடுட்டுக்கு ஆதரவு என்பதை மறுக்கிறார் கெடா மசீச தலைவர்

தாம் ஹூடுட் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சினார் ஹரியானின் வெளிவந்த செய்தியை கெடா மசீச தலைவர் சோங் இட் சியு மறுத்துள்ளார்.

அந்த மலாய்மொழி நாளேட்டுக்கு தொலைபேசி வழி வழங்கிய நேர்காணலில், ஹூடுட் சட்ட விவகாரம் பற்றிப் பேசப்படவே இல்லை என்று சோங் கூறினார்.

“அவர்கள் ஹூடுட்டைத் தொடவில்லை,அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.எனவே,அவர்கள் வெளியிட்ட செய்தி எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது”, என்றாரவர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பாஸ் பிஎன்னில் சேர வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது பற்றி மட்டுமே தாம் எதிர்வினை ஆற்றியதாக சோங் தெரிவித்தார்.

“எந்தக் கட்சி பிஎன்னுடன் சேர்வதாக இருந்தாலும் பிஎன் தலைமை அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அது பிஎன் அமைப்புவிதிகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதை அதில் நான் தெளிவாகவே சொல்லியிருந்தேன்”.

மசீச, ஹூடுட் சட்டத்துக்கு எதிர்ப்பானது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“நான் ஹூடுட் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன்.இவ்விசயத்தில் நான் எங்கள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கின் நிலைப்பாட்டைப் பின்பற்றுகிறேன்”, என்றாரவர்.

TAGS: