அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வார்

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே எனப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் தாம் வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எண்ணியுள்ளதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நிதித் துறைச் செய்திகளை வெளியிடும் பூளும்பர்க் துணைக்கோளத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைக் கூறியுள்ளார்.

வர்த்தக, அறிவாற்றல் சொத்துக்கள், தொழிலியல் சட்டம் ஆகியவற்றில் சிறப்பு ஈடுபாடு காட்டும் தமது சட்ட நிறுவனத்தில் கவனம் செலுத்தவும் அது வழி வகுக்கும் எனவும் அவர் சொன்னார்.

பெர்சே தோரணத்தை ஏந்துவதற்காக தாம் ஒதுக்கி வைத்த கிரிக்கெட், கலைகள் போன்ற தனிப்பட்ட விருப்பங்களில் ஈடுபடவும் அது உதவும் என்றும் அவர் சொன்னதாக பூளும்பர்க் கூறியது.

பெர்சே-யில் பொறுப்பேற்பதற்கு முன்னர் தாம் போராடி வந்த, குறிப்பாக இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்படும் விஷயங்கள் சம்பந்தப்படும் போது மகளிர் உரிமைகள் போன்ற இன்னும் முடிக்காத பல பணிகளும் இருப்பதாகவும் அம்பிகா தெரிவித்தார்.

“ஷாரியா நீதிமன்றங்களும் சிவில் நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளில் குடும்பச் சட்ட பிரச்னைகள் மீது நீதிமன்றங்கள் பொறுப்புக்களை கை விட்டுள்ளன,” என அவர் சொன்னதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு தீர்வாக இஸ்லாத்துக்கு மதம் மாற விரும்பும் தனிநபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் சட்டத்தை அரசாங்கம் 2008ம் ஆண்டு முன்மொழிந்தது. ஆனால் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான மலாய் ஆட்சியாளர் மன்றத்தில் அந்த நடைமுறை தேக்கமடைந்துள்ளது என்று அம்பிகா குறிப்பிட்டார்.

“தீர்வுக்கு முதல் படியாக அது இருக்க வேண்டும். அரசியலில் இனத்தையும் சமயத்தையும் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை சாதாரண மலேசியர்களும் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். உண்மையில் மக்கள் முதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.”

அம்பிகா, தூய்மையான நியாமான தேர்தல்களைக் கோரி நடத்தப்பட்ட இரண்டு பெரிய சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

அவரது பங்கு காரணமாக அவருக்கு அச்சுறுத்தல்களும் கொலை மருட்டல்களும் வந்துள்ளன. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அவரை கடுமையாகக் குறை கூறியுள்ளனர்.