உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசாங்கம் அண்மைக்காலம்வரை குற்றத்தடுப்புமீது கவனம் செலுத்துதலைத் “அவசியமெனக் கருதவில்லை” என்று கூறினார். இச்செய்தி தப்பாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக யாரும் கருத வேண்டாம்.
“இப்போது (குற்றத்தை எதிர்க்கும்) அரசியல் உறுதிப்பாடு உயர்மட்டத்திலும் நிலவுகிறது. மெர்டேகா காலம் தொடங்கி இப்படியொரு நிலை இருந்ததில்லை….அதற்குத் தேவை இல்லை என்றே கருதப்பட்டு வந்தது”, என்றவர் கூறினார்.
இதைக் கேட்டு வலைமக்கள், அதுவும் நாடு முழுக்க குற்றச்செயல்கள் பெருகிக்கிடப்பதைக் கண்டும் கேட்டும் வந்திருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? பொங்கிவிட்டார்கள்.
இதோ, ஹிஷாமுடின் கூற்றுக்கு டிவிட்டரில் இடப்பட்ட எதிர்வினைகள்:
பெனடிக்ட்: சுதந்திரத்துக்குப் பின்னர் குற்றத்தை எதிர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்த முதலாவது அமைச்சராம். தம்மை ஸ்பைடர்மேன் அல்லது பெட்மேன் போன்ற சுப்பர் ஹீரோவாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்.
இயன் டான்: ஊழல்=குற்றம்.ஊழலை அனுபவிப்பதே ஆனந்தம் என்கிறபோது அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லைதான்.
எரிக் டான்:பாதுகாப்பு தேவை இல்லையா? அப்படியானால் அமைச்சர்களுக்கு ஏன் இத்தனை மெய்க்காவலர்கள்?
லிம் டெக் ஹூய்: குற்ற-எதிர்ப்புக்கு முன்னுரிமை இல்லை என்றால் போலீஸ் எதற்கு?
கமல் ஷாபி: மெர்டேகா காலம் தொடங்கி இப்போதுதான் குற்ற-எதிர்ப்புக்கு முன்னுரிமை என்றால் இத்தனை காலமும் போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அரசாங்க அடியாட்களாக இருந்தார்களா அல்லது கைப்பாவைகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்களா?
வரிப்பணத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவிட்டும்கூட அவர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை, அப்படித்தானே.
காய் ஷிம்: என்ன செய்கிறோம் என்பதை அறியாத, எதையும் கட்டுப்பாட்டில் வைத்திராத அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். இந்த ஆள் பிரதமராக வந்து விடக்கூடாதுடா, சாமி.
லிங்: அப்புறம், எதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்கள்? உண்ணுவதற்கும் உறங்குவதற்குமா? அல்லது காப்பி காசு(duit kopi) கேட்பதற்கா?
மோக்கி நாராயண்: குற்றச்செயல்களா, என்ன குற்றம்? அதெல்லாம் வெறும் “நினைப்புத்தான்”. அரசாங்கம் செயல்படுகிறது என்பதுகூட அதே போன்ற பிரமைதான்.
அலெக்ஸ்: வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார். அந்தக் காலத்தில் குற்றச்செயல்கள் கலவரமூட்டும் வகையில் இல்லை என்று சொல்ல நினைத்தவர் இப்படிச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார்.
முகம்மட் சானி: ஆலோசகர்களாகக் கோமாளிகளை வைத்திருக்கிறார். அதுதான், இப்படி.
இங் கின் லூன்: அப்போது குற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்றால் 60களிலும் 70களிலும் குடிமக்கள் காவல் சுற்றில் ஈடுபட வகைசெய்த ருக்குன்தெத்தாங்கா உருவாக்கப்பட்டது எதற்காக?அறியாமல் உளறுகிறார் ஹிஷாமுடின்.
ஜெப்: ஹிஷாமுடினும் போலீசும் குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியிருப்பதால் இனியாவது குற்றச்செயல்கள் குறையும் என்று எதிர்பார்ப்போம்.