வறட்சியால் இலங்கையின் வடக்கே ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு

வட இலங்கையில் ஒருபோதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீருக்காக தூர இடங்களுக்கு அலைய நேரிட்டிருக்கின்றது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பவுசர் வண்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் போதிய அளவு நீரைப் பெற முடியாதிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றார்கள்.

வன்னியில் மல்லாவி போன்ற கிராமிய-நகரப் பகுதிகளிலும் தண்ணீருக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் பணம் செலவழித்து தூர இடங்களில் இருந்து தண்ணீரைப் பெற வேண்டியிருப்பதாகவும் அங்குள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் வறட்சியினால் கிணறுகள் வற்றியிருப்பதுடன் பல கிணறுகள் உப்பு நீராகியிருப்பதனால் அங்கு நிலைமை மோசமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

TAGS: