தமிழர்களே நம்பிக்கையோடு இருங்கள்: ஐ.நா-வுக்கான ஜப்பானிய தூதுவர்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் சமாதானத்தை கொண்டுவருவதென்பது இலகுவான விடயமல்ல; தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் என ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார்.

இலங்கை தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும்அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு கூடிய கவனம் எடுக்கும் என்று ஐ.நா-வுக்கான ஜப்பான் தூதுவருமான யசூசி அகாசி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து சமாதானத்திற்கும் நல்லிணக் கத்திற்குமான மக்கள் குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜப்பானைப் பொறுத்தவரையில் அங்கே ஜப்பானியர்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாடு. அங்கே எல்லாம் ஒரே மாதிரியானதாக இருக்கும். இலங்கை பல இனங்கள், பல்வேறுபட்ட கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாக இருக்கின்றது. அதனால் அது பலமானதாகவும் வாழ்க்கையை துடிப்பாக்கக் கூடிய நாடாகவும் இருக்கின்றது. இதனை அனைவரும் சரியாக பயன்படுத்தி ஐக்கிய இலங்கையை தோற்று விக்க உழைக்க வேண்டும்.”

“2009-ம் ஆண்டுக்கு முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. தற்போது அந்த நிலை மாறி சாதரண நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஏ-9 வீதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டு எங்கும் எல்லோரும் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நான் பல தடவைகள் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து கலந்துரையாடி யுள்ளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. அவர்கள் அதனை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் அவர்கள் நன்மையடைந்திருப்பார்கள்” என்று யசூசி அகாசி மேலும் அங்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை அடுத்து, கிளிநொச்சிக்கு சென்ற அவர், ஜப்பானின் நிதியுதவியுடன் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வாதாரத் திட்டங்களின் பயனாளிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை அவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

TAGS: