சீன உதவியுடன் தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவ குடியிருப்புகள்!

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு சீனா 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழர் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றிய நம்பகமான செய்திகள் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பல இடங்களில் சீன உதவியிலான இராணுவக் குடியிருப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

திருமுறிகண்டி பகுதியில் சீனா வழங்கிய உடனடியாக அமைக்கக்கூடிய வீடுகள் பல இராணுவத்தினருக்காக அமைக்கப்பட்டிருப்பதாகவும், முள்ளிக்குளம் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு தளம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதுபற்றி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவனத்தில் எடுக்காதுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என்ற பேரில் மக்களின் காணிகளில் சிங்கள இராணுவத்தினர் நிலையாகத் தளம் அமைத்து தங்கியிருப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

சிங்கள மக்களுக்கு சீனா உதவி செய்வதைத் தாங்கள் ஆட்சேபிக்கவில்லை என்றும் தமிழர் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதே ஆட்சேபணைக்குரியது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்திற்கு சீனா வழங்க முன்வந்துள்ள நிதியுதவி குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

TAGS: