நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாம் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக உத்துசான் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் கர்பால் சிங்கிடம் பலமுறை மன்னிப்புக் கோரினார்.
ஜுல்கிப்ளி ஜாலில் என்ற அந்த உத்துசான் செய்தி ஆசிரியர் தாம் எழுதிய “DAP diingat jangan bakar perasaan Melayu” என்ற கட்டுரையில் கவனக்குறைவும், தவறான புரிந்து கொள்ளலும் தம்மிடம் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
டிஎபியின் 2008 ஆம் ஆண்டு தேசிய மாநாட்டில் கர்பால் ஆற்றிய உரையின் அடிப்படையில் டிஎபி தலைவர் இஸ்லாத்தை நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்பதை நிராகரிப்பதாக கூறினார் என்று ஜுல்கிப்லி அவரது அறிக்கையில் எழுதியிருந்தார்.
அக்காலக்கட்டத்தில், “இஸ்லாமிய நாடு என்பதை நிராகரிப்பதும்”, “இஸ்லாத்தை நாட்டின் அதிகாரப்பூர்வமான சமயம் என்பதை நிராகரிப்பதும்” ஒரே அர்த்தத்தைக் கொண்டது என்று தாம் கருதியதாக ஜுல்கிப்லி தமது சாட்சியத்தில் கூறினார்.
இது குறித்து விளக்கம் பெற தாம் கர்பாலை தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். தமது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், பாஸ் கட்சியின் இஸ்லாமிய நாடு என்ற திட்டத்திற்கு எதிரான கர்பாலின் நிலைப்பாடு குறித்த இதர செய்தி அறிக்கைகளின் அடிப்படையிலும் அவர் அக்கட்டுரையை எழுதியதாகவும் ஒப்புக்கொண்டார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கர்பால் தொடர்ந்துள்ள ரிம10 மில்லியன் அவதூறு வழக்கு விசாரணையின் போது ஜுல்கிப்லி மட்டுமே சாட்சியம் அளித்தார்.
பெர்னாமாவின் செய்திப்படி, ஜுல்கிப்லி அவர் சாட்சியம் அளித்த போது கர்பாலிடம் பலதடவைகளில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தமது கட்டுரை வெளியிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் ஆகஸ்ட் 26, 2008 இல் உத்துசான் மலேசிய ஒரு திருத்தத்தை வெளியிடும் வரையில் தமது தவறை அவர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.
“உத்துசான் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது”
உத்துசான் வெளியிட்டிருந்த திருத்தத்தில் அக்கட்டுரை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கர்பாலிடம் மன்னிப்பு கோருவதகாவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அக்கட்டுரையின் தீவிரப் போக்கு காரணமாக அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளிதழுக்கு எதிராக வழக்குத் தொடரும் தமது உரிமையை கர்பால் வலியுறுத்தினார்.
தமது சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் ஜுல்கிப்லி அவரது கட்டுரையில் (பக்கம் 2) தாம் இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வமான சமயம் என்பதை நிராகரிப்பதாக தவறாக எழுதியுள்ளதாக கர்பால் கூறினார்.
இஸ்லாம் இந்நாட்டின் அதிகாரப்பூர்வமான சமயம் என்பது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்றும், அது குறித்த தம்முடைய நிலைப்பாடு முரண்பாடற்றதாக இருந்துள்ளது என்றும், அந்நிலைப்பாடு தாம் நாடாளுமன்றத்தில் கடந்த 26 ஆண்டுகளாக ஆற்றியுள்ள உரைகளில் பிரதிபளிக்கப்பட்டுள்ளது என்றும் கர்பால் கூறினார்.
“இக்கட்டுரையின் காரணமாக மக்கள் என்னை இஸ்லாத்திற்கு எதிரானவர் என்றும், பல்லின மலேசிய மக்களிடையே பிளவை உருவாக்க விரும்புகிறவர் என்றும் எண்ணினர்”, என்று கர்பால் கூறினார்.
இரு தரப்பினரின் வாதங்களை செப்டெம்பர் 24 இல் உயர் நீதிமன்ற நீதிபதி நிக் ஹஸ்மாட் நிக் முகம்மட் செவிமடுப்பார்.
பி.மோகன குமார் உத்துசான் மலேசியா (ம) பெர்ஹாட்டையும், சங்கீத் கவுர் டியோ கர்பாலையும் பிரதிநிதித்தனர்.