இம்மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் தனித்தனியே சந்தித்து இந்தியர்களின் சமூக-பொருளாதாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது பற்றி விவாதிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி கேட்டு இருவருக்கும் எழுதியிருக்கிறார்.
“அப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண அன்றும் இன்றும் பின்பற்றப்படும் அணுகுமுறைகள் போதுமானவை அல்ல என்பது இண்ட்ராபின் கருத்து”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
“பிரச்னைக்குத் தீர்வுகாண முதலில் பிரச்னையை சரியானபடி அடையாளம் காண வேண்டும். அதைக் கொள்கை-வகுப்பாளர்களும் தீர்வு-காண்போரும் அடையாளம்காணத் தவறி விட்டனர் என்று இண்ட்ராப் கருதுகிறது.
“அத்துடன் செய்து முடிக்க வேண்டும் என்ற அரசியல் உறுதிப்பாடும் இருக்க வேண்டும். அதையும் காண முடியவில்லை”.
நேற்று இண்ட்ராப், சந்திப்புக்கு அனுமதிகேட்டு இரு தலைவர்களுக்கும் இரண்டு கடிதங்களை அனுப்பியது.
‘மக்களே தீர்மானிக்கட்டும்’
நஜிப்பும் “பிரதமராகக் காத்திருப்பவரான” அன்வாரும், இந்தியர்களின் சமூக-பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதில் தங்களுக்குள்ள அக்கறையையும் கடப்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பாக இதைக் கருத வேண்டும் என்று வேதமூர்த்தி வலியுறுத்தினார்.
“இரண்டு வாரங்களில் அல்லது செப்டம்பர் 11-க்குள் எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.2012 செப்டம்பர் இறுதிக்குள் சந்திப்பை நடத்த நினைக்கிறோம். அந்தச் சந்திப்புகள் நடப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
“எங்களின் கோரிக்கைக்கு அவர்களின் எதிர்வினையை வைத்து அவர்களின் மனப்பாங்கு குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிடுவோம்.ஆனாலும், எங்களின் பணி தொடரும். ஏனென்றால், ‘இன்னும் கடக்க வேண்டும் பல மைல்கள், அப்புறம்தான் உறக்கம்’ ”, என்றாரவர்.
வேதமூர்த்தி, 2007 நவம்பர் இண்ட்ராப் பேரணி நடந்துமுடிந்த சில நாள்களில் அந்த இயக்கம் பற்றி உலகுக்கு எடுத்துச்சொல்ல நாட்டை விட்டு வெளியேறினார். 2008 ஏப்ரலில் அவருடைய கடப்பிதழ் ரத்துச் செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் வெளிநாட்டிலிருந்து விட்டு ஆகஸ்ட் முதல் தேதி எந்தப் பிரச்னையுமின்றி நாடு திரும்பினார்.