தண்ணீர் விவகாரம்: மறுசீரமைப்புக்கான விவரங்களை சிலாங்கூர் சமர்பிக்கும்

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தண்ணீர் மறுசீரமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை அடுத்த மாதம் நீர் வள சலுகைகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களிடமும் சமர்பிக்கும் என மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

“நாங்கள் செப்டம்பர் இரண்டாவது வாரம் யோசனைகளையும் அவற்றை அமல்படுத்துவதற்கான முறைகளையும் தெரிவிப்போம்.”

“சிலாங்கூரில் உள்ள அந்த நான்கு நிறுவனங்களுக்கும் நாங்கள் பேரங்களையும் கொடுப்போம்,” என ஷா அலாமில் இன்று பிற்பகல் நிருபர்களிடம் கூறினார்.

Syarikat Bekalan Air Selangor Sdn Bhd (Syabas), Konsortium Abass Sdn Bhd (Abass), Syarikat Pengeluar Air Selangor Sdn Bhd and Puncak Niaga Holdings Bhd ஆகியவையே சிலாங்கூரில்  நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களாகும்.

லங்காட் 2 நீர் தேக்கக் கட்டுமானம் சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் செலவுகளை ஏற்படுத்தாது என எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய் நேற்று விடுத்த அறிக்கையையும் காலித் சாடினார்.

நாட்டின் நிதி நிலை குறித்து அமைச்சருக்கு தகவல்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதை சின் அறிக்கை காட்டுவதாக அவர் சொன்னார்.

“லங்காட் 2 கட்டுமான பிரச்னையை பீட்டர் சின் புரிந்து கொள்ளவில்லை என நான் எண்ணுகிறேன்.”

“அதற்கு இன்னும் நிதிகள் தேவை. அந்த நிதிகள் வரிகள் அல்லது கட்டண உயர்வுகள் மூலமாகவே பெறப்பட வேண்டும். எதுவும் இலவசம் இல்லை.”

“அவர் சிலாங்கூருக்கு மானியம் கொடுத்தாலும் அது நாம் செலுத்திய மக்கள் வரிப்பணத்திலிருந்து தான் வரவேண்டும்,” என காலித் குறிப்பிட்டார்.

நேற்று மலாய் நாளேடு ஒன்று சின் வெளியிட்ட அறிக்கையைப் பிரசுரித்திருந்தது.