போலீஸ் குற்றப் புள்ளிவிவரங்கள் மீது சுயேச்சை ஆய்வு தேவை என பக்கத்தான் கூறுகிறது

குற்றப் புள்ளி விவரங்கள் தொடர்பில் முழுத் தகவலையும் வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் செயலகம் இன்று போலீசைக் கேட்டுக் கொண்டது. குற்றசெயல் விகிதங்கள் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு போலீஸ் சுயேச்சை ஆய்வுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என அது வலியுறுத்தியது.

குற்றப்புள்ளி விவரங்கள் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி பக்காத்தான் செயலகம் அவ்வாறு குறிப்பிட்டது.

பக்காத்தான் அறிக்கையை பாஸ் தேர்தல் இயக்குநர் ஹாட்டா ராம்லி, டிஏபி வியூகவாதி லியூ சின் தொங், பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

போலீஸ் அறிக்கை எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் மறுக்கத் தவறி விட்டதாக அவர்கள் கூறினர்.

குற்றச் செயல் அளவுகள், குற்றங்கள் வகைப்படுத்தப்பட்ட முறை ஆகியவை பற்றிய அவசியமான புள்ளி விவர ஆதாரங்களை போலீசார் வெளியிடவில்லை. பெரும்பாலான விவரங்கள் முழுமையாக இல்லை. பகுதியாகவே இருக்கின்றன. போலீசாரின் உண்மையான நடைமுறைகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டுள்ள போது அவை பாடப்புத்தக நடைமுறையில் வருணிக்கப்பட்டுள்ளன.”

குற்றப் புள்ளி விவரங்களை எப்படிக் குறைத்துக் காட்ட முடியும் என்பது மீது 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் எழுதியதாகக் கூறப்பட்ட அனாமதேயக் கடிதம் ஒன்று வெளியானதைத் தொடர்ந்து அந்தப் பிரச்னை எழுந்தது. குற்றங்களை அட்டவணை அல்லாத குற்றங்கள் என வகைப்படுத்தப்படுவதின் மூலம் குற்றச் செயல் விகிதங்களை குறைத்துக் காட்ட முடியும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

குற்றப் புள்ளி விவரங்கள் ஜோடிக்கப்படுகின்றன என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ள வேளையில் அந்தக் கடிதம் வெளியானது.  குற்ற விகிதங்கள் குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறிக் கொள்வதற்கும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அடிக்கடி வெளியாகும் குற்றக் கதைகளுக்கும் வேறுபாடு இருந்ததே அதற்குக் காரணமாகும்.