ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடி பயணம்

யாழ்ப்பாணம்: கடல் வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் தேடிச் செல்லும், இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இவர்கள் தப்பிச் செல்வதற்கான காரணம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த சூழலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள் ஓரளவிற்கு நடந்து வருவதோடு, போரில் இடம்பெயர்ந்த தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியேற துவங்கி உள்ளனர்.

இது, இலங்கை சாதாரண நிலைக்கு திரும்பும் அறிகுறியாக இருந்தாலும், சத்தமில்லாமல் மற்றொரு சமூகப்போக்கு உருவாகி வருகிறது.

இலங்கையில் உள்ள பொருளாதார வாய்ப்புகள் மீது நம்பிக்கை இல்லாத, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் கடன் பிரச்னையில் சிக்கி உள்ள நபர்கள், சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல துவங்கி உள்ளனர்.

கடல் வழியாக செல்ல முயலும் இவர்களில், தினமும், 10 பேராவது, இலங்கை கடற்படையினரிடம் சிக்குகின்றனர். சிக்காமல் தப்பிச்செல்லும் நபர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகம் என, கூறப்படுகிறது. இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் இடையேயும் இந்த போக்கு, அண்மைக் காலமாக அதிகரித்து உள்ளது.

TAGS: