ரவூப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Himpunan Hijau பேரணி தொடர்பில் மூன்று தனி நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வோங் கின் ஹுங், உதவித் தலைவர் தெங்கு ஷாஹாடான் தெங்கு ஜாபார், திராஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் சொங் சியூ ஒன் -னின் உதவியாளரான எம் ராஜு ஆகியோரே அந்த மூவர் ஆவர்.
அவர்கள் இன்று பிற்பகல் மணி 12.30க்கு ரவூப் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குப் பின்னரே அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அந்தப் பேரணியிலும் ஊர்வலத்திலும் 15 வயதுக்கு உட்பட்ட பல பிள்ளைகள் காணப்பட்டது பற்றியே போலீஸ் விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டதாக எம் ராஜு கூறினார்.
“15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை கொண்டு வரக் கூடாது, பேரணி நிகழ்ந்த இடத்திலிருந்து ஊர்வலமாகச் செல்லக் கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளை நாங்கள் மீறியதாக போலீசார் கூறினர்.”
“அந்தத் தங்கச் சுரங்கத்தைச் சேர்ந்த பேராளர் ஒருவர் எங்கள் மகஜரை ஏற்றுக் கொள்ள வருவார் என போலீசார் எங்களுக்கு உறுதி அளித்திருந்தனர். ஆனால் அது நிகழாததால் நாங்கள் ஊர்வலமாகச் சென்றோம் என நாங்கள் தெரிவித்தோம்,” என்றார் ராஜு.
ரவூப் விளையாட்டு வளாகத் திடலிலிருந்து புக்கிட் கோமானில் உள்ள Raub Australia Gold Mining (RAGM) Sdn Bhd சுரங்கத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்வதற்கு 10,000 பேர் முயன்றனர்.
ஆனால் சுரங்கத்தின் இரு பேராளர்கள் வந்ததைத் தொடர்ந்து, அவர்களை அந்தத் திடலிலிருந்து 500 மீட்டர் தொலைவில் போலீசார் நிறுத்தி விட்டனர்.
அந்த இருவரும் சுரங்க நிறுவனத்தின் கீழ் நிலை அதிகாரிகள் என்பதால் தாங்கள் திருப்தி அடையவில்லை என பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறினர். என்றாலும் கூட்டம் கலைந்து செல்ல வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.
மூவர் மீதும் எந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை எனக் கூறிய ராஜு, மேல் நடவடிக்கை எடுக்கும் முன்னர் தங்கள் விசாரணை முடிவுகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாக மட்டும் போலீசார் கூறியதாகச் சொன்னார்.
புக்கிச் கோமான் சைனாய்ட் தடை நடவடிக்கை குழு உறுப்பினர்களான ஷெர்லி ஹுயூ, சொங் சொய் யென் ஆகிய மேலும் இருவரையும் போலீசார் நாடியுள்ளனர்.
அவர்கள் இப்போது வெளியூருக்குச் சென்றுள்ளதால் சனிக்கிழமை அவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
கம்போங் பாரு புக்கிட் கோமானுக்கு அருகில் உள்ள அந்த தங்கச் சுரங்கத்தில் சைனாய்ட் பயன்படுத்துவதற்கு எதிராக அந்தக் குழு 2007ம் ஆண்டு முதல் போராடி வருகிறது.
சுரங்கத்திலிருந்து வெளியாகும் புகை அந்தக் கிராமவாசிகளுக்கு பல வகையான நோய்களை கொண்டு வந்துள்ளதாக அந்தக் குழு கூறுகிறது.
சட்ட ரீதியான நடவடிக்கைகள் உட்பட பல வழிகளில் முயன்றும் பலன் கிடைக்காமல் போனதால் ரவூப்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நாடு முழுவதையும் சேர்ந்த சுற்றுச்சூழல் போராட்டவாதிகள் பலரும் பங்கு கொண்டனர்.