நசாருதின் விலக்கப்படுவார் என உத்துசான் ஆரூடம்

வரும் ஞாயிற்றுக் கிழமை பாஸ் கட்சியின் syura மன்றமும் மத்தியக் குழுவும் கூடும் போது அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா நீக்கப்படுவார் என உத்துசான் மலேசியா ஆரூடம் கூறியுள்ளது.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும் பாஸ் தலைவர்கள் ( Anwarinas ) ஆதிக்கம் செலுத்தும் மத்தியக் குழு அன்றைய தினம் காலை நிகழும் கூட்டத்தில் நசாருதினை நீக்குவதற்கான முடிவை எடுக்கும் என அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான், அடையாளம் காட்டாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் அந்தக் கும்பல், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி syura மன்றம் நசாருதினை வெளியேற்றும்  முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

syura மன்றம் பாஸ் கட்சியின் மிகவும் உயரிய அமைப்பாகும். அது முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. அந்த மன்றம் ஞாயிற்றுக்கிழமை  மாலையில் கூடுகிறது.

“செப்டம்பர் 9ம் தேதி காலை நிகழும் மத்தியக் குழுக் கூட்டத்தில் நசாருதினை விலக்குவதற்கு முடிவு செய்யுமாறு Anwarinas கும்பலுக்கு அன்வார் ஆணையிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.”

அன்றைய தினம் மாலையில் syura மன்றம் கூடுவதற்கு முன்னதாக நசாருதின் நீக்கப்பட வேண்டும் என அன்வார் விரும்புவதாக நம்பப்படுகின்றது,” என அந்த வட்டாரங்கள் உத்துசானிடம் கூறின.

ஆனால் syura மன்றத்தின் முடிவுகளில் எந்தத் தரப்பும் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாது என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் வலியுறுத்தியுள்ளார்.

மன்றத்தின் மீது அன்வார் தமது  செல்வாக்கைப் பயன்படுத்துவார் எனக் கூறப்படுவது பொறுப்பில்லாத அவதூறு என அவர் சினார் ஹரியானிடம் கூறினார்.

பாச்சோக் எம்பி-யான நசாருதின் ஹுடுட் மீதான பாஸ் கட்சி நிலை குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து கட்சியில் கடுமையாக குறை கூறப்பட்டு வருகின்றார்.

பாஸ் மத்தியக் குழுவில் நசாருதின் உறுப்பினராக இல்லாததால் அவருடைய தலை விதியை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த மத்தியக் குழு syura மன்றத்திடம் விட்டு விட்டது.

 

TAGS: