பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்த ஹிண்ட்ராப் விடுத்த வேண்டுகோளை பிகேஆர் வரவேற்கிறது.
அன்வாருக்குப் பதில் அந்த அரசு சாரா அமைப்பைச் சந்திப்பதற்கு தனது உதவித் தலைவர் தியான் சுவாவை அந்தக் கட்சி முன்மொழிந்துள்ளது.
“பிஎன் அரசாங்கம் புறக்கணித்ததாலும் பாகுபாடு காட்டியதாலும் பின் தங்கி கடுமையான சமூகப் பிரச்னைகளை எதிர்நோக்கும் சமூகங்களுடைய நல்வாழ்வை மேம்படுத்த அரசு சாரா அமைப்புக்களும் அவை போன்ற மற்ற அமைப்புக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை கெஅடிலான் வரவேற்கிறது.”
“அந்த சூழ்நிலையில் இந்திய சமூகத்தில் ஒதுக்கப்பட்டு விட்ட பிரிவுகளின் நிலையை மேம்படுத்தும் ஹிண்ட்ராப் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்,” என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
இந்திய சமூகம் எதிர்நோக்கும் சமூக-பொருளாதாரப் பிரச்னைகளை விவாதிக்க வருமாறு அண்மையில் ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி அன்வாருக்கு விடுத்த அழைப்புக்கு சைபுதின் பதில் அளித்தார்.
“அந்த வகையில் ஹிண்ட்ராப் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க விவாதங்களை நடத்தும் பொருட்டு வேதமூர்த்தியைச் சந்திக்க நாங்கள் பிகேஆர் உதவித் தலைவரும் எம்பி-யுமான தியான் சுவா-வை தேர்வு செய்துள்ளோம்,”என்றார் அவர்.
இந்திய சமூகப் பிரச்னைகளுக்கு ‘நிரந்தர’ தீர்வு காண்பதற்கு தம்முடன் சந்திப்பு நடத்துமாறு ஆகஸ்ட் 29ம் தேதி வேதமூர்த்தி ஆளும் கூட்டணியின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் அழைப்பு விடுத்தார்.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த ஹிண்ட்ராப் பேரணிக்குப் பின்னர் வேதமூர்த்தி நாட்டிலிருந்து வெளியேறி உலக அளவில் அந்த இயக்கத்துக்குப் பிரச்சாரத்தை நடத்தினார். அவரது பாஸ்போர்ட் 2008 ஏப்ரல் மாதம் ரத்துச் செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு நாடு கடந்து வாழ்ந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி எந்தத் தடையுமின்றி வேதமூர்த்தி தாயகம் திரும்பினார்.