-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செப்டெம்பர் 9, 2012.
தாய்மொழிப்பள்ளிகளுக்கு கடந்த புதன்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் வீ கா சியோங் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்திய இயக்கமும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது, அதன் அறியாமையைக் காட்டுகிறதா?அல்லது அக்கறையின்மையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை!
இந்தச் சமூகத்தின் தாய்மொழி உயிர் வாழ்வைப் பாதிக்கக் கூடிய மிக முக்கிய விவகாரம் மீது துணைக் கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சிலுள்ள, மலாய்காரர் அல்லாத ஒரே முக்கியமானவரான டாக்டர் வீ கா சியோங் மறைமுகமாகச் சுட்டி காட்டியுள்ள ஒரு கடுமையான விவகாரம் மீது இந்திய சமூகம் காட்டும் பாராமுகம் ஏமாற்றமளிப்பதாகவுள்ளது.
நம் மொழிக்கு ஏற்படவிருக்கும் கடுமையான பின்விளைவைக் கவனத்தில் கொள்ளாமல், நாட்டிலுள்ள சுமார் 340 தமிழ்ப்பள்ளிகளின் இருள் சூழ்ந்த எதிர்காலம் குறித்து எந்த உணர்வுமின்றி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஏமாளித்தனமாக வேறு ஏதேதோ குறித்தெல்லாம் போலீஸ் புகார் கொடுக்கும் வல்லவர்கள், சுய இலாபத்துக்காக மற்றவர்களுக்குப் பின்பாட்டு பாடுவதில் கவனம் செலுத்தியே இச்சமூகத்தின் எதிர்காலத்தையே பாழடித்து விட்டனர்.
இந்திய சமூகத்தைத் திசைத்திருப்ப கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதே அணுகுமுறைகளை மத்திய பாரிசான் அரசால் இன்னும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாக இன்றைய நாட்டு நடப்புகள் அமைந்துள்ளன.
தாய்மொழிப்பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் அல்லது தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறவேண்டும். இல்லையேல் மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ள துணை அமைச்சர், நம்மைவிடப் பெரிய சமூகமான சீன சமூகத்தின் தொடக்கப்பள்ளிகளில் 35 விழுக்காடு மூடப்படக் கூடிய நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைப்படி 150 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகள் பாதிக்கப்படும் என்றால், சிலாங்கூரில் மட்டும் 46 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகளை இந்திய சமூகம் இழக்கும் என்பதாகும்.
அதாவது, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளில் 45 பள்ளிகள் 150 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் அல்லது இடம் மாறியாவது பிழைக்க வேண்டும் என்று நமக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைச் சமூகம் ஆராய வேண்டும்.
ஆனால், தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடையவர்கள், வழிக்காட்ட வேண்டிய பாரிசான் மத்திய அரசின் இந்திய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் மக்களைத் திசை திருப்புவதில் தீவிரமாகவுள்ளனர் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, இந்தியர்கள் தங்கள் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும்.
இந்நாட்டில் எண்ணிக்கையில் இந்தியர்கள் அதிகம் வாழும் அதாவது மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள சிலாங்கூர் மாநிலத்திலேயே 46 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து என்றால், தேசிய நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகக் கடுமையான அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது உறுதி.
நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் 65 விழுக்காடு அதாவது 340 தமிழ்ப்பள்ளிகள் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. ஆபத்தான நிலையிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து நன்கு அறிந்துள்ள மஇகாவின் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் ஏன் வாயைத் திறப்பதில்லை?
சமூகத்தின் கண்களைக் கட்டி, உண்மைகளை மறைத்து இன்னும் எத்தனைக் காலந்தான் மஇகா மற்றும் பாரிசானின் இதர இந்திய பங்காளி கட்சிகள் காலங்கடத்துவார்கள்?
மாற்று இடம் பெறுவது என்பது சீனப்பள்ளிகளுக்கு எளிதாக இருக்கலாம். இருந்தும் சீனர்களை தயாராகும்படி மசீச கேட்டுவரும் வேளையில், மஇகாவின் நிலையோ இன்னும் திருடிய நிலத்திற்குக் காரணம் கண்டு பிடிக்கும் பரிதாப நிலையிலுள்ளது.
நகர்புறங்களில் அமையும் புதிய வீடமைப்புகளில் சீனப்பள்ளிகளுக்கு மாற்று நிலம் பெறுவது எளிது. ஆனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடம் பெறுவது குதிரைக்கொம்பாக இருக்கிறது.
இந்த இக்கட்டுகளை உணர்ந்தே சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசு இம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகள் இருக்கும் இடம் மற்றும் நிலை குறித்து 2009ம் ஆண்டே ஆய்வு நடத்தித் தோட்ட உட்பகுதிகளிலுள்ள 21 தமிழ்ப்பள்ளிகளை நகரங்களை ஒட்டிய பகுதிகளுக்கும், வீடமைப்புகளுக்கு அருகிலும் மாற்றி அமைத்திட நிலத்திற்கான கோரிக்கைகளைத் தோட்ட நிர்வாகங்களிடம் முன்வைத்துள்ளது.