சரவாக் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தாயிப் மாஹ்முட் சுயமாக அறிவித்துக் கொண்ட காலக் கெடு வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது. ஆனால் அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
சரவாக் மக்கள் இப்போது ‘அரசியல் நிலைத்தன்மை, அமைதி, முறையான மேம்பாடு’ ஆகியவற்றை அனுபவித்து வருவதால் அந்த மாநிலத்தில் தலைமைத்துவ மாற்றத்துக்கு அவசியமில்லை என தாயிப் நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளதை லிம் சுட்டிக் காட்டினார்.
அடுத்த ஏப்ரல் மாதம் தாயிப் விலக மறுத்தால் தாயிப் ஒய்வு பெறுவதற்கான தேதியை தாம் அவருடன் பேசி முடிவு எடுத்துள்ளதாக 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்த நஜிப்புக்கு கடுமையான பின்னடைவாக இருக்கும் என லிம் எச்சரித்தார்.
“தாயிப் ஆற்றிய உரை நஜிப்பின் செவிகளை நோக்கமாகக் கொண்டிருந்தது எனத் தெரிகிறது. நஜிப்புடன் தாம் செய்து கொண்ட புரிந்துணர்வை தாயிப் நிறைவேற்றப் போவதில்லை என அந்தச் செய்தி தெளிவாக உணர்த்தியுள்ளது.”
“நஜிப்புக்கும் தாயிப்புக்கும் இடையில் இப்போது யார் பெரியவர் என்ற போராட்டம் நிகழ்கிறது. அரசியல் ரீதியில் யார் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியும் என தாயிப் நஜிப்புக்கு சவால் விடுக்கிறார்.”
“தாயிப் சரவாக் முதலமைச்சராக இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என சரவாக் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் ஏற்பட்ட புரிந்துணர்வை அமலாக்க முடியாத அளவுக்கு நஜிப் அரசியல் ரீதியில் பலவீனமாக இருப்பதாக தாயிப் நம்புகிறார்.”
சரவாக் தேர்தலில் பிஎன் வலுவிழந்து வருவதாக தெரிந்த பின்னர் நஜிப் நேரடியாகப் பிரச்சாரம் செய்வதற்காக அங்கு சென்றார்.
தாயிப் தமது 30 ஆண்டு கால ஆட்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பைப் பொருட்படுத்தாமல் பெரிய அளவுக்கு சொத்துக்களைச் சேர்த்து விட்டதாக கூறப்படுவது அந்தத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக இருந்தது.
தாயிப் ஒய்வு பெறுவதற்கான உடன்பாட்டை தாம் அவருடன் செய்து கொண்டுள்ளதாகவும் தம்மை நம்புமாறும் நஜிப் பிரச்சாரத்தின் போது கூறினார்.
நெருக்குதல் அதிகரித்த பின்னர் தாம் இரண்டு ஆண்டுகளில் விலகுவதாக பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் தாயிப் அறிவித்தார். ஆனால் பதவி ஏற்ற பின்னர் தமது ‘தவணைக் காலத்தின் மத்தியில்’ வெளியேறுவதாக கூறி சந்தேகத்தைக் கிளப்பினார்.
வரும் செப்டம்பர் மாதம் 16ம் தேதி, நஜிப் அந்த சிக்கலான விஷயத்தை எப்படித் தீர்க்கப் போகிறார் என்பதை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என லிம் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் சரவாக் பிந்துலுவில் நிகழும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்காக தமது முழு அமைச்சரவையுடன் நஜிப் அங்கு செல்கிறார். அதில் தாயிப்பும் கலந்து கொள்வது திண்ணம்.”
“சரவாக் தேர்தல்களுக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் தாயிப் விலகுவதற்குத் தாம் செய்து கொண்ட உடன்பாடு இன்னும் உயிருடன் இருக்கிறதா என்பதௌ நஜிப் தெளிவுபடுத்துவதற்கு அது நல்ல தருணமாகும்.”