அன்வார்: பிஎன் என்றென்றும் தோல்வி காணும் என டாக்டர் மகாதீர் சொல்வது சரியே

“பிஎன் பக்காத்தான் ராக்யாட்-டிடம் தோல்வி கண்டால் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்ற டாக்டர் மகாதீர் ஆரூடம் நடந்து விட்டால் அதற்கு பிஎன் கூட்டணியின் சொந்த நடவடிக்கைகளே காரணமாக இருக்கும்.”

இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

“நீங்கள் (பிஎன்) ஒரு முறை தோல்வி கண்டால் அது என்றென்றும் தொடரும் என அவர் (மகாதீர்) சொல்கிறார். அது உண்மைதான். ஏனெனில் பிஎன் செய்துள்ள ஊழலும் முறைகேடான நிர்வாகமும் அம்பலமாகி விடும்,” என அவர் இன்று கோலாலம்பூரில் கூறினார்.

பக்காத்தான் கூட்டரசு அதிகாரத்தைக் கைப்பற்றினால் பிஎன் தன்னை ஆதரிக்குமாறு மக்களை நம்ப வைப்பற்கு கடினமாக இருக்கும் என்பதே பக்காத்தானுக்கும் பிஎன் -னுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு என அன்வார் சொன்னார்.

“பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் நாடு நியாயமாக நல்ல முறையில் நிர்வகிக்கப்படும் என்பதால் பிஎன் -னை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை மகாதீர் மறைமுகமாகச் சொல்வதாகவே நான் கருதுகிறேன்.”

கூட்டரசு ஆட்சியிலிருந்து பிஎன் -னை விரட்டுவதில் பக்காத்தான் வெற்றி பெற்றால் தான் என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதி செய்ய திரைமறைவுத் தந்திரங்களில் இறங்கும் என மகாதீர் பல முறை எச்சரித்துள்ளார்.

அதற்கு முன்னதாக அன்வார், லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் பந்தாய் டாலாமில் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பேசினார்.

அண்மைய காலமாக அரசியல் வன்முறைகள் பரவலாக நிகழ்ந்துள்ள போதிலும் அந்த உபசரிப்புக்கு வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அன்வார் தமது உரையில் பாராட்டினார்.

“ஏற்கனவே இங்கு நிகழ்ந்த நிகழ்வில் கற்கள் வீசப்பட்ட போதிலும் பயப்படாமல் இங்கு வந்துள்ள கூட்டத்தினருக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

கடந்த மே மாதம் அதே பகுதியில் பிகேஆர் செராமா நிகழ்வின் போது கற்கள் வீசப்பட்டதால் பலர் காயமடைந்தனர். முதியவர் ஒருவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன.

இதனிடையே இன்று அதிகாலை மணி 2.00 வாக்கில் அந்த திறந்த இல்ல உபசரிப்புக்காக கூடாரங்களை அமைத்துக் கொண்டிருந்த கட்சி ஊழியர்களை இளைஞர் கும்பல் ஒன்று ஏளனம் செய்து கூச்சல் போட்டதாக நுருல் இஸ்ஸாவின் அரசியல் செயலாளர் பாஹ்மி பாட்லி கூறியுள்ளார்.

“அந்தக் கும்பல் எங்கள் ஊழியர்களை மருட்டியதுடன் எங்கள் கொடிகளை இறக்குமாறும் வற்புறுத்தினர்,” என்றார் அவர்.

ஆனால் சிறிது நேர இழுபறிப் போராட்டத்துக்கு பின்னர் அந்தக் கும்பல் வெளியேறி விட்டது.