ஈராக் துணை அதிபர் தாரிக்குக்கு மரண தண்டனை அறிவிப்பு

பாக்தாத்: ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை கொன்றது தொடர்பான வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளது

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன் அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. துணை அதிபர் பதவியில் இருந்த தாரிக் அல் ஹாஷ்மி, 26 சம்பவங்களில் 46 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில், அவரை ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், துருக்கி சென்ற ஹாஷ்மி மீண்டும் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே, ஹாஷ்மி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு, இவர், துணை அதிபராக பொறுப்பேற்றார். கடந்த 2010ல் நடந்த தேர்தலில், மீண்டும் இவர் துணை அதிபராக தேர்வானார்.