சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது தமக்குத் தெரியாது என ஏப்ரல் மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது கடமைப் பிரிவு ஒன்றுக்கு பொறுப்பேற்றிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
அவர் ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற தேர்தல் சீர்திருத்த ஆதரவுப் பேரணியில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி விசாரிக்கும் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்திடம் அவ்வாறு தெரிவித்தார்.
அந்த விசாரணையின் 15வது நாளன்று வழக்குரைஞர் மன்றத்துக்காக விசாரணையைக் கவனிக்கும் வழக்குரைஞர் ரோஜர் சான் எழுப்பிய கேள்விக்கு இன்ஸ்பெக்டர் பாரிட் சைரி பதில் அளித்தார்.
அந்தப் பேரணியின் போது போலீசார் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட விசாரணையில் சாட்சியமளித்த 31வது நபர் இன்ஸ்பெக்டர் பாரிட் ஆவார்.
பெர்சே 3.0 பேரணி அண்மைய காலத்தில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய பேரணியாகும். அதனைக் கலைப்பதற்கு போலீசார் கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
இன்று அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவருடைய இன்னொரு சகாவும் இன்று முற்பகலில் சாட்சியமளித்தார்கள்.