பேராக் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பிரதமர் பஸ்ஸில் சென்றார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடு முழுவதும் தாம் மேற்கொண்டு வரும் பயணத்தின் ஒரு பகுதியாக பேராக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் அவரது குழுவினரும் பஸ்ஸில் பயணம் செய்தனர்.

“வழக்கமாக காரில் செல்வோம். இந்த முறை நாங்கள் மக்களைச் சந்திக்க பஸ்ஸில் செல்கிறோம். நடைமுறைகளை தவிர்த்தால் எப்படி இருக்கும் என்பதை நான் உணர விரும்புகிறேன்.”

“மக்களையும் தலைவர்களையும் பிரிப்பதற்குத் தடைகள் ஏதும் இருக்கக் கூடாது,” என அவர் ஈப்போவில் தமது முதல் நிகழ்வில் கூறினார்.

ஈப்போ தாமான் சுன் சூனில் அவர் நோன்புப் பெருநாள் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் ஈப்போவிலிருந்து சுங்கை சிப்புட்டுக்கு சென்றார். அங்கு நஜிப் பல இன மக்களுடன் உரையாடினார். சுங்கை சிப்புட் லாசாவைச் சேர்ந்த ஒராங் அஸ்லி மக்களும் அங்கு இருந்தார்கள்.

பிஎன் -னுக்கு உறுதியான ஆதரவாளர்கள் இருந்த போதிலும் மேலும் ஆதரவு தேடும் பொருட்டு பிஎன் தலைவர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் செல்ல வேண்டும் என நஜிப் கேட்டுக் கொண்டார்.

“நமது தீவிர ஆதரவாளர்கள் மீது மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. நமது ஆதரவாளர்களாக மாறக் கூடியவர்களிடமிருந்து நாம் ஆதரவைப் பெற வேண்டும்.”

சமூக, நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்கிய புதிய பொருளாதார வடிவத்துக்கு இணங்க அந்த அணுகுமுறை அமைவதாகவும் பிஎன் தலைவர் சொன்னார்.

“தாங்கள் ஒதுக்கப்படுவதாக மக்கள் எண்ணுவதைக் காண அரசாங்கம் விரும்பவில்லை. அதே வேளையில் ஏழைகளுக்கும் வசதி குறைந்தவர்களுக்கு சமூக நீதி அடிப்படையில் உதவிகள் கொடுக்கப்படும்.”

“இது மக்களுக்கு முதலிடம் கொடுக்கும் அரசாங்கம்,” என அவர் நோன்புப் பெருநாள் விருந்தில் கலந்து கொண்ட எல்லா இனங்களையும் சார்ந்த ஐயாயிரம் பேரிடம் கூறினார்.

மக்களுடைய பிரச்னைகளை அறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்கும் பொருட்டு தாம் களத்தில் இறங்கி மக்களுடன் நடந்து செல்வதாகவும் நஜிப் சொன்னார்.

பெர்னாமா