இலவச நீர் விநியோகம் தொடர்பில் சிலாங்கூர் அரசு மீது 711 பேர் வழக்கு

சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல் செய்துள்ள இலவச தண்ணீர் விநியோகம் தங்களுக்குக் கிடைக்காதது குறித்து மொத்தம் 711 பயனீட்டாளர்கள் மூன்று தரப்புக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த மூன்று தரப்புக்களில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமும் ஒருவர் ஆவார்.

சிலாங்கூர் அரசாங்கம், சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd ஆகியவை மற்ற தரப்புக்களாகும்.

ஷா அலாம் குடியிருப்பாளர்களான அந்த வாதிகள் அனைவரும் தங்கள் வழக்கை ஷா அலாம் உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் இன்று காலை மணி 9.30 வாக்கில் கமாருதின் அண்ட் பார்ட்னர்ஸ் என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக சமர்பித்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரதிவாதிகளுக்கு வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களும் கொடுக்கப்படும் என வழக்குரைஞர் கமாருதின் அகமட் சொன்னார்.

பெர்னாமா