‘பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது’

பக்காத்தான் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல் சம்பவங்களையும் அவர்களது படங்கள் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகளையும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் போலீஸ் புலனாய்வு செய்துள்ளது.

இவ்வாறு புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் முகமட் பாக்ரி ஜினின் கூறுகிறார்.

போலீசார் தங்கள் விசாரணைகளில் எந்தத் தலைவருடைய அரசியல் நிறம் மீது பாரபட்சம் காட்டுவதில்லை என முகமட் பாக்ரி சொன்னார்.

போலீசார் மீது வீசப்பட்டுள்ள அத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவர் குறிப்பிட்டார்.

“புகார் செய்யப்பட்ட எல்லா சம்பவங்களையும் போலீசார் தொழில் நிபுணத்துவ ரீதியில் எப்போதும் பாரபட்சமின்றி எந்த ஒரு கட்சியின் பின்னணியையும் கருத்தில் கொள்ளாமல் விசாரிக்கின்றனர்,” என்றும் முகமட் பாக்ரி தெரிவித்தார்.

அவற்றுள் சில சம்பவங்கள் மீது போலீசில் புகார் செய்யப்படுவதற்கு முன்னரே புலனாய்வுகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“எடுத்துக்காட்டுக்கு 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி பினாங்கு முதலமைச்சருடைய படம் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி அது குறித்து புகார் செய்யப்பட்ட அன்றைய தினமே விசாரிக்கப்பட்டது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் பிரமுகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை மலேசியாகினி செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டிருந்தது.