நம்பகமற்ற-கபடத்தனமான அரசியலால் தமிழர்களை மீள்எழுகை செய்ய முடியாது!

“தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வ நாயகம் கூறிய விடயம், செல்லப்பா சுவாமிகளின் மகா வாக்கியம் போன்றது.

தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனத் தந்தை செல்வநாயகம் கூறிய கருத்தை நாம் சிங்கள ஆட்சியாளர்களோடு மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தோம். அதனால் அவரின் கூற்றில் இருக்கக்கூடிய மறுபக்கம் அல்லது மறுமுனை பற்றி நாம் சிந்திக்கத் தவறிவிட்டோம். உண்மையில், ஈழத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் உரிமை எதனையும் வழங்கமாட்டார்கள் என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வநாயகம் அந்தக் கருத்தைக் கூறவில்லை. மாறாக, “சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான உரிமையை ஒருபோதும் வழங்கமாட்டார்கள் என்பதுடன், தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வார்கள். நாம் நம்பியிருக்கக்கூடிய இந்தியா எங்களை நம்பவைத்து-உதவுவது போல நடித்து எங்கள் கழுத்தை அறுக்கும்” போன்ற பல்வேறு விடயங்களையும் முன்வைத்தே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வநாயகம் கூறினார் என்பதே உண்மை.

இன்று தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய பெரும் பிரச்னை நம்பிக்கையான அரசியல் தலைமை இல்லாமையாகும். தன்னுடைய அரசியல் தலைமைக்கு ஆமாப் போடக் கூடியவர் யாரோ, அவரைத் தேர்தலில் நிறுத்துவதன் மூலம் தத்தம் அரசியல் இலாபங்களை அடைவது, பதவிகளை எட்டிப் பிடிப்பது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சுருங்கக்கூறின், தமிழ் மக்களுக்கு விசுவாசமான-நம்பிக்கையான- தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்ற தியாக உணர்வு டைய அரசியல்வாதி எவரையும் தமிழ் அரசியல் தரப்புக்களில் காணமுடியாது என்பது கண்கூடான உண்மை.

தமிழ் அரசியல் தலைமைகளின் உள்ளார்ந்தம் இதுவாக இருக்கையில், வெளியார்ந்தம் பகட்டுப் பேச்சுக்களும் பசப்பு வார்த்தைகளுமாக இருக்கின்றன. இதேவேளை, தமிழ் மக்கள் எதை நம்பியிருந்தார்களோ, அதையயல்லாம் இழந்து தங்கள் பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டு எம் சாவு எப்போது, இந்த வாழ்க்கை போதும் என்ற மன நிலையில் இருக்கின்றனர்.

தாங்கமுடியாத இழப்புகள், கடும் ஏமாற்றங்கள் எங்கள் தமிழ் மக்களை உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பக் கடலில் வீழ்த்திவிட்ட நிலையில், அவர்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் மேலெழுப்புவதற்கு கடுமையான அர்ப்பணிப்புகள், தியாகங்கள் நிறையத் தேவைப்படும். இதை ஏமாற்று அரசியல் தலைமைகளால் ஒருபோதும் செய்ய முடியாது. தமிழ் மக்களின் மீள்எழுகையை வெற்றிகரமாகச் செய்யாமல் எங்களுக்கான அரசியல் பலத்தை உருவாக்குவது ஒருபோதும் சாத்தியமாகாது.

– வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

TAGS: