சுஹாகாம், தட்டுமுட்டுச் சாமான் பொருள் வியாபாரி ஒருவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோனதைக் காண்பிக்கும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் பிரேத பரிசோதனை அறிக்கையையும் வெளியிடுமாறு போலீசை கட்டாயப்படுத்த முடியும் என்கிறார் அதன் ஆணையர் முகம்மட் ஷா’அனி அப்துல்லா.
இறந்துபோன சியா சின் லீ-இன் குடும்பத்தார் நேற்று கொம்டாரில் முகம்மட் ஷா’அனியைச் சந்தித்தபோது அவர், அவற்றைப் பெற்றுதருவதாக வாக்களித்தார்.
1999சுஹாகாம் சட்டத்தின் பிரிவு14(ஏ-பி) மனித உரிமை ஆணையத்துக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதாக அவர் சொன்னார்.
அதைப் பெற்றுத் தருவதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு அக்குடும்பத்தார் கேட்டுக்கொள்ள அதைச் செய்ய அவரால் இயலவில்லை.படிப்படியாகத்தான் அதைச் செய்ய வேண்டும் என்றாரவர்.
தூக்குப் போட்டுக்கொண்டு மாண்டாரா?
சியாவின் குடும்பத்தாருக்கும் சுஹாகாமுக்கிடையிலும் நிகழ்ந்த அச்சந்திப்பில், முகம்மட் ஷா’அனியுடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, சுவாராமின் பினாங்கு ஒருங்கிணைப்பாளர் லீ ஹூய் பெய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
36-வயது சியா, தஞ்சோங் தொக்கோங் போலீஸ் லாக்-அப்பில் அடைக்கப்பட்ட 20 நிமிடங்களில் காலை மணி 5.30க்கு இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
போலீஸ் வெளியிட்ட அறிக்கை “தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்த”தாகக் கூறியது. ஆனால். சியாவின் குடும்பத்தார் அதை நம்பவில்லை.அவர் நிலையான வாழ்க்கை வாழ்ந்தவர் எனவே, தற்கொலை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என்றார்கள்.
சியா, தாமான் சித்தியாவில் மோட்டார்-சைக்கிள் களவுபோனதன் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே செள, ஒரு மாதமாகியும் சியாவின் இறப்புப் பற்றிய விசாரணையில் முன்னேற்றல் இல்லாமலும் அவரின் குடும்பத்தாருக்குப் போதுமான தகவல் கிடைக்காமலும் இருப்பது குறித்து வருத்தமடைவதாகக் கூறினார்.
“லாக்-அப்பில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை வெளியிட போலீஸ் ஒப்புக்கொண்டிருப்பதாக அறிகிறேன்.அந்தப் பதிவுகள் மர்மான முறையில் காணாமல் போயிருக்கக்கூடாது”, என்று தஞ்சோங் எம்பியுமான செள குறிப்பிட்டார்.
போலீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்
அவ்விவகாரத்தில் அக்கறை காண்பித்த சுஹாமாமுக்கு செள(வலம்) நன்றி தெரிவித்தார்.அத்துடன் சியாவின் இறப்பு இன்னொரு புள்ளிவிவரமாக மாறி அந்த அளவிலேயே நின்று போகாமல் உண்மையைக் கண்டறிய தேவையான விசாரணைகளையும் சுஹாகாம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சியாவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கும் கடப்பாடு போலீசுக்கு உண்டு என்று கூறிய அவர், “விவகாரத்தை மூடிமறைத்து மக்கள் மறந்துவிடுவார்கள்” என்று அவர்கள் இருந்துவிடக்கூடாது என்றார்.
ஜார்ஜ்டவுன் ஒசிபிடி கான் கொங் மெங், போலீஸ் தடயவியல் அறிக்கைக்காகவும் வேதியல் அறிக்கைக்காகவும் காத்திருப்பதாகக் கூறினார்.அவை கிடைத்தவுடன் மரண விசாரணை தொடங்கும்.