முதுநிலை போலீஸ் அதிகாரி: பெர்சே 3.0 இன் போது அடிக்கப்பட்டது மிகவும் வெறுக்கத்தக்கது

பெர்சே 3.0ன் போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஊடகவியலாளர்களையும் காயப்படுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகள் ‘மிகவும் வெறுக்கத்தக்கவை’ என முதுநிலை கோலாலம்பூர் போலீஸ் அதிகாரி ஒருவர் வருணித்துள்ளார்.

“அவ்வாறு ‘kurang ajar’ (வெறுக்கத்தக்க) முறையில் நடந்து கொண்ட போலீஸ்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என  கோலாலம்பூர் போலீஸ் சிஐடி வேவு, நடவடிக்கைகள் பிரிவுத் தலைவர் ஏசிபி கைரி அஹ்ராசா கூறினார்.

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்தப் பேரணியின் போது மனித உரிமை அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணையில் கைரி சாட்சியமளித்தார்.

நிருபரான ராட்ஸி ரசாக்கை பல போலீஸ் அதிகாரிகள் அடித்துள்ளது பற்றியும் ஹீ ஜென் வெய் ஹோட்டல் ஒன்றிலிருந்து இழுத்து வரப்பட்டு கைது செய்யப்பட்ட வேளையில் அடிக்கப்பட்டது பற்றியும் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது கைரி அவ்வாறு கூறினார்.

அன்றைய தினம் எந்தக் குற்றமும் செய்யாத பங்கேற்பாளர்களை போலீஸ் அதிகாரிகள் கைது செய்யக் கூடாது என வலியுறுத்திய அவர், கட்டிடங்களுக்குள் சென்று பங்கேற்பாளர்களை இழுத்து வந்திருக்கவும்  கூடாது என்றார். ஏனெனில் கட்டிடத்துக்குள் சென்றவர்கள் சாலைகளிலிருந்து கலைந்து சென்று விட்டதாக கருதப்பட வேண்டும் என்றும் கைரி குறிப்பிட்டார்.