இலங்கை அமைச்சரின் மகனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தலைமறைவாக உள்ள இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவையும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் தேதி கொழும்பிலுள்ள நட்சத்திர தங்கும்விடுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து மாலக சில்வா அடங்கலாக 7 பேர் அடங்கிய குழுவினர் இராணுவ மேஜரைத் தாக்கியதாகக் கொழும்பு கொம்பனி வீதி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும்  காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த தங்கும் விடுதியின் வாகனத்தரிப்பிடப் பகுதியிலிருந்த பலரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்களின் ஒளிப்பதிவுகளையும் விசாரணைக்காகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவ குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் வாக்குமூலத்தின் படியும் மேலும் பலரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் படியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர்களிலே அடாவடியாக பல செயல்பாடுகளில் ஈடுபடுபவர் அமைச்சர் மேர்வின் சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: