இசி துணைத் தலைவருக்கு ‘அரசியல் சார்பற்ற நிலை’ என்றால் என்ன என்பதே தெரியவில்லை

உங்கள் கருத்து: “பிஎன் அவமதிக்கப்பட்டால் அது அரசமைப்புக்கு முரணானது என்றால் எதிர்க்கட்சிகள் அவமதிக்கப்பட்டால் பரவாயில்லையா?”

இசி: படத்தை மிதிப்பது வெறுக்கத்தக்கது அரசமைப்புக்கு முரணானது

அடையாளம் இல்லாதவன்_rb345: இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் அரசியல்வாதியைப் போல் பேசுகிறார். அரசியல்வாதியைப் போல் நடிக்கிறார். அவர் அரசியல் ஆடுகிறார். இசி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகும் அரசியல் கட்சிகளில் ஒன்று என்பதைப் போல அவர் நடந்து கொள்கிறார்.

அது சரி, வரும் தேர்தலுக்கு உங்கள் ‘கட்சியை’ பதிவு செய்து விட்டீர்களா ?

பெர்ட் தான்: வான் அகமட் நடுவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் தமது அறிக்கை வழி பிரதமருக்கு கூஜா தூக்குகிறார். அது இசி அதிகாரி என்ற முறையில் அவரது வேலை அல்ல. தாம் பாரபட்சமாக நடது கொள்வதை அவர் மெய்பித்து விட்டார். (அது நமக்கு நீண்ட காலமாகவே தெரியும்).

வாக்களிப்பு மோசடிகளை தடுக்க வெளிநாடுகளில் உள்ளவர்கள் உட்பட அனைவரும் திரும்பி வாக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது.

13வது பொதுத் தேர்தல் மலேசிய வரலாற்றில் திருப்பு முனையாக அமையப் போகிறது.

வெறும் பேச்சு வேண்டாம்: வான் அகமட், பிரதமர் நஜிப் ரசாக் படத்தை மிதித்ததின் மூலம் அவர் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பற்றிக் கருத்துரைக்கும் பொறுப்பு எப்போது இசி-யிடம் ஒப்படைக்கப்பட்டது ?

கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் படத்தின் மீது சிறுநீர் கழித்தது, பினாங்கு முதலமைச்சருக்கு அவருக்கு வீட்டுக்கு முன்னால் ஈமச் சடங்குகளை நடத்தியது, லிம் குவான் எங்படத்தை எரித்தது ஆகியவை பற்றி என்ன சொல்வது ?.

உங்களைப் போன்ற பட்டுப் போன மரங்களுக்கு ‘அரசியல் சார்பற்ற நிலை’ என்றால் என்ன என்பது கூடத் தெரியாது. என்றாலும் இசி துணைத் தலைவர் என்ற பதவியை மட்டும் வகிக்கின்றீர்கள்.

தயவு செய்து மலேசியர்களுக்கு ஒரு நன்மையைச் செய்யுங்கள். ‘அரசியல் சார்பற்ற நிலை’ என்றால் என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையில் ‘balik tidur, jangan buka mulut’ (உறங்கச் செல்லுங்கள், வாயைத் திறக்க வேண்டாம்)

யாப் சிஎஸ்: முதலாவதாக தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை- இருந்தும் இசி  துணைத்தலைவர் ஏன் இந்த விஷயத்தில் வாயைத் திறக்கிறார் ?

இரண்டாவதாக இது முற்றிலும் வேறு விவகாரம். வான் அகமட் இந்த மாதத்துக்கான ‘துதி பாடுவோர்’ எனப் பட்டம் கொடுக்கலாம்.

அர்ச்சன்: இசி துணைத் தலைவர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் அரசியல் அறிக்கை விட வேண்டுமானால் அம்னோவில் சேருங்கள். நிச்சயம் உங்களுக்கு இடம் கிடைக்கும்.

கேபியி: ஆகவே மிகவும் சந்தேகத்துக்குரிய கறை படிந்த வாக்காளர் பட்டியலை வைத்திருப்பது அரசமைப்புக்கு உட்பட்டதா ?

தான் கிம் கியோங்: வான் அகமட் பாஸ், டிஏபி, கெரக்கான் தலைவர்களுடைய படங்கள் மீது வெறுப்பை ஊட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நீங்கள் ஏன் பேசவில்லை ? எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் முன்னாள் இராணுவத்தினர் செய்ததை என்னவென்று சொல்வது ?

உங்கள் எண்ணங்கள் எவ்வளவு பாரபட்சமானவை என்பதை அது உணர்த்தி விட்டது. நீங்கள் மௌனமாக இருப்பதே நல்லது. இல்லை என்றால் உங்கள் பாரபட்சம் மேலும் அம்பலமாகும்.

கேஎஸ்என்: படத்தை மிதிப்பதற்கு இசி-க்கும் என்ன சம்பந்தம். அது அதன் வேலை அல்ல. அதற்குப் பதில் இசி வாக்காளர் பட்டியலைத் திருத்தி தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும்.

உங்கள் வேலையைப் பாருங்கள். தேவையில்லாமல் மற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

தான் கிம் கியோங்: வான் அகமட் உண்மையில் உங்களுக்கு எதுவும் தெரியாதா அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூஜா தூக்குகின்றீர்களா ?

ஏற்பாட்டாளர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஏற்கனவே அத்தகைய நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர். தாங்கள் அதனை ஏற்கவில்லை என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கற்களை எறிந்த பின்னர் கைகளை மறைத்துக் கொள்வதாக நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். நீங்கள் கேட்க விரும்பும் விஷயங்களை மட்டுமே வாசிக்கின்றீர்கள்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: எதிர்க்கட்சிகளைச் சார்ந்த மற்ற தலைவர்கள் அவமதிக்கப்பட்டது பற்றி நமது இசி துணைத் தலைவர் எதுவும் சொல்ல மறுக்கிறார். படங்களை மிதிப்பது தவறு என அரசமைப்பில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது ?

இந்த காலத்தில் மக்களிடம் தலைவர்கள் மரியாதையை பெற வேண்டும். கண்மூடித்தனமான விசுவாசம் ஏதுமில்லை.