பிஎன் பெரிய அளவில் வெற்றி பெறும் என டாக்டர் மகாதீர் எதிர்பார்க்கவில்லை

பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்பார்க்கிறார். ஆனால் அது நல்ல பெரும்பான்மையைப் பெறும் என அவர் எண்ணவில்லை.

அதனால் கூட்டரசு அரசாங்கத்தின் நிலை தொடர்ந்து ‘பலவீனமாகவே’ இருக்கும் என அவர் சொன்னார்.

அவர் நேற்று பெர்டானா தலைமைத்துவ அற நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் கருத்தரங்கில் பேசினார்.

அந்த பலவீனம் காரணமாக மேம்பாடு பாதிக்கப்படும். அந்த நிலை வர்த்தகத்துக்கு நல்லதல்ல என்றும் 22 ஆண்டுகளுக்கு நாட்டின் பிரதமராக இருந்த மகாதீர் சொன்னார்.

“இப்போது அரசாங்கத்துக்குக் கூடுதலாக 30 இடங்கள் மட்டுமே உள்ளன. அது பலவீனமாக இருப்பதாக கருத வேண்டும். 15க்கும் மேற்பட்ட எம்பி-க்கள் கட்சி மாறினால் அரசாங்க மாற்றம் ஏற்பட்டு விடக் கூடும்.”

“அதனால்தான் நடப்பு அரசாங்கம் நலிவாக உள்ளது. அது நிலைத்திருக்க பல்வேறு கோரிக்கைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. நாட்டில் மேம்பாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. வர்த்தக சமூகத்துக்கும் நல்ல முறையில் செவி சாய்க்க முடியவில்லை.”

“தனிப்பட்ட முரையில் என்னுடைய காலத்தில் இருந்ததைப் போல நான் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விரும்புவேன். அப்போது வலுவான அரசாங்கம் இருக்கும். நான் பிரதமராக இருந்த ஐந்து தவணைக் காலத்திலும் அந்த நிலை நீடித்தது.”

“13வது பொதுத் தேர்தலில் பிஎன் தொடர்ந்து வெற்றி பெறும். ஆனால் சிறிய பெரும்பான்மையில் அந்த வெற்றி இருக்கும்,” என்றார் மகாதீர்.

அடுத்த அரசாங்கத்தை தேர்வு செய்யும் போது தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத் தேர்வு செய்வதே நல்லது என தமது வலைப்பதிவில் குறிப்பிட்டதை அவர் அந்தக் கருத்தரங்கிலும் மீண்டும் வலியுறுத்தினார்.

நடப்பு அரசாங்கம் ஊழல் போன்ற பல பிரச்னைகளை எர்திர்நோக்குவதை அந்த முன்னாள் பிரதமர் ஒப்புக் கொண்டார். என்றாலும் அதிலிருந்து முற்றாக விடுபட்ட அரசாங்கம் ஏதுமில்லை என்றார் அவர்.

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மலேசியர்கள் எதனை எதிர்பார்க்கலாம் ? என்னும் தலைப்பை மகாதீர் உரை அமைந்திருந்தது.

புத்ராஜெயாவில் பக்காத்தான் ராக்யாட்டை வைப்பது நல்லதல்ல என குறிப்பிட்ட அவர், “pakatan (கூட்டணி)” என்னும் வார்த்தை மோசமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்றார். “அது பங்காளித்துவத்தைக் குறிக்கிறது. அது நல்லதல்ல.”

“எனவே மக்கள் அதனைத் தேர்வு செய்வது விவேகமானதாக இருக்காது,” என்றும் அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.

‘பக்காத்தான் வெற்றி பெற்றால் உறுதியான கொள்கை இருக்காது’

ஹுடுட் மீது பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் நீடிக்கும் தகராற்றை தாக்கிப் பேசிய மகாதீர், பக்காத்தான் வெற்றி பெற்றால் அரசியல் மீதே அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதியான கொள்கைகள் இருக்காது என்றும் சொன்னார்.

“ஹுடுட் மீது கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் டிஏபி தலைவர் கர்பால் சிங்-கும் மோதிக் கொள்வதை நீங்கள் காணலாம்.”

“தனிப்பட்ட முறையில் பாஸ் கூறும் ஹுடுட் முறையை நான் ஏற்கவில்லை. காரணம் அது மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதகமாக இருக்கும்.”

“திருடியதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம் கை வெட்டப்படுவதையும் அதே நேரத்தில் அது போன்ற குற்றத்துக்கு முஸ்லிம் அல்லாதவருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்படுவதையும்  நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா?”

“நான் உலாமா அல்ல. ஆனால் சட்டம் நியாயமாக இருக்க வேண்டும் என திருக்குர் ஆன் -ல் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் நாம் மக்களுக்கு நியாயம் செய்யவில்லை,” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

பிகேஆர் பற்றியும் அவர் கருத்துரைத்தார். நீதிக்குப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சியை நாம் இங்கு பெற்றுள்ளோம். அவர்கள் நீதி என்னும் வார்த்தையைக் கடத்தி விட்டனர். அதனால் நாங்கள் (அரசாங்கம்) நீதிமன்ற வளாகத்தை (Palace of Justice) Istana Kehakiman என பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

“அரசாங்கத்திடமிருந்து சிந்தனைகளைக் கடத்துவதே அவர்களுடைய வேலை,” என்றார் அவர்.