தூய்மையான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி மலேசியா தினத்தன்று நடத்தப்பட்ட பேரணி மீது டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் ஏழு மாணவர்களும் சுவாராம் போராளி ஒருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
அந்த எழுவரில் சுவாராம் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர் போராளியுமான சுக்ரி அப்துல் ரஸாம், Solidariti Mahasiswa Malaysia (SMM) தலைவர் முகமட் சாப்வான் அனாங், Pro-Mahasiswa Nasional தலைவர் எடிகோப் செடியாந்தோ ஆகியோரும் அடங்குவர்.
அவர்களில் பெரும்பாலோர் பிற்பகல் மணி 2.35 வாக்கில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குள் நுழைந்தனர். அவர்களுடன் வழக்குரைஞர் பார்ஹானா அப்துல் ஹலிமும் சென்றார்.
எஹ்சான் புஹாரி பத்ருல் ஹிஷாம், அக்ராம் இக்ராமி தாயிப் அஸாமுடின், ஹாசிக் அப்துல் அஜிஸ், முகமட் ஷாஹிட் முகமட் ஜைனி, ரோஹாயு ரோஸ்லி ஆகியோர் மற்ற மாணவர் போராளிகள் ஆவர்.
பல்கலைக்கழகத் தேர்தல்கள் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வேட்பாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் தேதிகள் நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கோரி கோலாலம்பூரில் செப்டம்பர் 16ம் தேதி 800 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.