அப்துல் அசீஸ்: சிலாங்கூரின் வாக்காளர் தணிக்கை இசி பெயரைக் கெடுக்கும் முயற்சியாகும்

வாக்காளர்களைத் தணிக்கை செய்யும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையில் நல்ல நோக்கம் கிடையாது. அது, உண்மையான வாக்காளர்களையும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் ஆணைய(இசி)த்தின் பெயரைக் கெடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டது.

இவ்வாறு கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கவனப்படுத்திய ஒரு குற்றச்சாட்டைச் சுட்டிக்காண்பித்தார்.

நசுத்தியோன், கோம்பாக், சுங்கை புசுவில் ஒரு சிறிய குடிசையில் 13 வாக்காளர்கள் இருப்பதாக பதிவாகியிருப்பதாகக் குற்றம் சுமத்தினார்.

அவரது குற்றச்சாட்டை இசி விசாரித்ததில் அந்தக் குடிசையில் யாரும் குடியிருக்கவில்லை என்பதும் அது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதும் தெரிய வந்தது.சைபுடின் குறிப்பிட்ட முகவரியில் ஒரு காப்பிக் கடை உள்ளது.முக்கிய சாலைக்குப் பக்கத்தில் அது அமைந்திருப்பதால் அதையே அங்குக் குடியிருக்கும் பலரும் தங்கள் கடிதப் போக்குவரத்து முகவரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

சைபுடின், அப்துல் அசீசுடன்  கடந்த வியாழக்கிழமை ரேடியோ24 ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இசி, அந்தக் குடிசை, அங்குள்ள வீடுகள், காப்பிக்கடையில் உள்ள அஞ்சல்பெட்டி முதலியவற்றைக் காண்பிக்கும் நிழற்படங்களை ஊடகங்களிடம் வழங்கியது.

“(வாக்காளர் பட்டியலை)ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இசி-யை வந்து பாருங்கள். பல அரசியல் கட்சிகள் வந்து எங்களைச் சந்தித்துள்ளன. ஆனால், அவை அதைப் பற்றி ஊடகங்களிடம் சொன்னதில்லை.

“நாங்கள் தவறே செய்யாதவர்கள் என்று சொல்ல மாட்டேன். .நாங்கள் ஒன்றும் சூப்பர்மேன் அல்ல. தவறு இருந்தால்,சட்டத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்வோம்”, என்று அப்துல் அசீஸ் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியலில் யாரும் கை வைக்க உரிமை இல்லை என்பதை அப்துல் அசீஸ்(இடம்) வலியுறுத்தினார்.

அரசமைப்புப்படி  வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் அதிகாரம் இசிக்கு மட்டுமே உண்டு.

“வாக்காளர் பட்டியலைப் பரிசோதனை செய்யவோ தணிக்கை செய்யவோ  தனிப்பட்டவர்களையோ அமைப்புகளையோ நாங்கள் அனுமதித்தது இல்லை”.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பதிவாகி, அரசு இதழிலும் வெளியாகி விட்டால் பின்னர் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தவிர்த்து வேறு எவரும் கேள்வி எழுப்பவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்றாரவர்.