பினாங்கு ஊராட்சித் தேர்தல்: இசி முடிவு செய்துவிட்டது

பினாங்கில் மீண்டும் ஊராட்சித் தேர்தல்களைக் கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டிருப்பது குறித்து சட்டத்துறைத் தலைவர்(ஏஜி)அலுவலகத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.ஆனால், அம்முடிவைப்  பொதுவில் அறிவிப்பதற்குமுன் முதலில் பினாங்கு முதல்வருக்குத்தான் அது தெரியப்படும்.

“முடிவு செய்தாகிவிட்டது.அதை முதலில் முதலமைச்சருக்குத் தெரிவிப்பதுதான் நல்லது”, என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப்  நேற்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

ஊராட்சித் தேர்தல் குறித்து பினாங்கு முதலமைச்சர் தமக்கு எழுதிக் கேட்டிருந்ததாகவும் அது பற்றி ஆராயப்பட்டு வருவதாக தாம் பதில் எழுதியதாகவும் அப்துல் அசீஸ் கூறினார்.

அவ்விவகாரம் தொடர்பில் ஏஜியின் கருத்தைக் கேட்டறிந்த பின் ஆணையம் இப்போது முடிவு செய்திருக்கிறது. அம்முடிவு இன்று அல்லது அடுத்த வாரம் கடிதம் வாயிலாக முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படும்.

அம்முடிவு என்னவென்பதைக் கூற அப்துல் அசீஸ் மறுத்தார்.ஆனால், ஊராட்சித் தேர்தல்களுக்கு வகை செய்த 1960ஆம் ஆண்டு ஊராட்சித் தேர்தல் சட்டம் ரத்துச் செய்யப்பட்டுவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

பினாங்கு அரசு,  ஜூலையில் மாநிலச் சட்டமன்றத்தில் பினாங்கு, புரோவின்ஸ் வெல்லஸ்லி  ஊராட்சி சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து ஊராட்சித் தேர்தலை நடத்த வேண்டுமாய் இசி-யைக் கேட்டுக்கொண்டது.

இசி அந்த வேண்டுகோளை நிராகரித்தால், அவ்விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லப்போவதாகவும் மாநில அரசு அறிவித்தது.

 

 

TAGS: