நஜிப்: நான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவை இல்லை.

பிஎன் தமது தலைமைத்துவத்தின் கீழ் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

அதனால் எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் மாற்றத்திற்கு முயற்சி செய்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார்.

“பிஎன் தலைமைத்துவத்தின் கீழ் நான் வாக்குறுதியை வழங்குவதோடு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டு வர முடியும்.”

நஜிப் நேற்றிரவு துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த விருந்தில் பேசினார். அந்த நிகழ்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இது எதிர்க்கட்சிகள் வழங்கும் உறுதியற்ற மாற்றத்திற்கான வாக்குறுதிக்கு நேர்மாறானது என்றார் அவர்.

“மாற்றம் என்பது சிறந்த வார்த்தை. இந்த நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் மாற்றத்துக்கான அவசர வேண்டுகோளை விடுக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன்: மாற்றம் வேண்டும் என்பதற்காக நாம் மாற்றத்தை நாடக் கூடாது. சிறந்ததற்கு – உண்மையில் அர்த்தமுள்ள மாற்றத்தையே ஏற்படுத்த வேண்டும்.”

“நாங்கள் உண்மையான, முறையான, சீரான, திட்டமிடப்பட்ட மாற்றத்தை விரும்புகிறோம். உறுதியற்ற சூழ்நிலைக்கு கொண்டு செல்லக்  கூடிய மாற்றத்தை அல்,” என கோலாலம்பூர் ஸ்தாபாக்கில் உள்ள அந்தக் கல்லூரியின் தலைமை வளாகத்தில் நஜிப் கூறினார்

உலகளாவிய நிலைக்கு மாறாக கடந்த மூன்று மாதங்களில் 5.4 விழுக்காடு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது நாட்டின் ஆற்றலையும் பொருளாதார, அரசாங்க உருமாற்றத் திட்டங்களின் வெற்றியையும் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதில்லை. எதிர்க்கட்சிகளின் கொள்கை அறிக்கையான புக்கு ஜிங்கா அமலாக்கப்பட்டால் நாம் இரண்டு ஆண்டுகளில் நொடித்துப் போவோம்.”

“இலவசக் கல்வியை வழங்க PTPTN உதவித் திட்டத்தை ரத்துச் செய்வது, டோல் கட்டணங்களை அகற்றுவது, குடும்ப வருமானத்தை 4,000 ரிங்கிட்டாக உயர்த்துவது, வாகன விலைகளைக் குறைப்பது, சபா, சரவாக்கிற்கான எண்ணெய் உரிமப் பணத்தை 20 விழுக்காட்டுக்கு உயர்த்துவது போன்ற அவற்றின் வாக்குறுதிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்,” என்றார் நஜிப்.

‘இலவச விருந்து’ என எதுவும் இல்லை என வலியுறுத்திய நஜிப், அந்தக் கொள்கைகளை அமலாக்குவது என்பது மக்கள் மீது வரிகளை அதிகரிப்பது என அர்த்தம் என்றார்.

“சூரியனையும் சந்திரனையும் பிரபஞ்சத்தையும் வழங்குவது போன்ற வாக்குறுதிகளினால் நாம் கவரப்பட்டு விடக் கூடாது. நீங்கள் சிலரை சில காலத்துக்கு முட்டாள் ஆக்கலாம். ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்ய முடியாது.”

“நீங்கள் விவேகமான மக்கள், துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி பட்டதாரிகள், நீங்கள் உங்கள் சமூகத்தை பற்றி நினைக்கின்றீர்கள், நிலைத்தன்மை, முன்னேற்றம், வளப்பம் ஆகியவற்றை வழங்கக் கூடிய அரசாங்கத்தை நீங்கள் விரும்புகின்றீர்கள். நான் வாக்குறுதி அளிக்கும் அரசாங்கம் அது தான். எதிர்வரும் ஆண்டுகளில் நாங்கள் இன்னும் நன்றாக இயங்குவோம்,” என்றார் பிரதமர்.

இந்த நாட்டுக்கு மசீச அளித்துள்ள பங்கிற்கு நல்ல உதாரணம் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கல்லூரி வழங்கும் 74 பயிற்சிகளுக்கு அரசாங்கம் வழங்கிய அங்கீகாரத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாண்டு நடத்தப்படும் இரண்டாவது விருந்து இதுவாகும். கடந்த ஜுலை மாதம் முதலாவது விருந்தில் கலந்து கொண்ட நஜிப்புக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.