அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பக்காத்தான் ராக்யாட் குறித்த மூன்று மாயைகளைப் போக்குவதற்கு தமது கட்சி உதவ வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.
பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என்பது முதலாவது மாயை ஆகும் என அவர் பேராக் டிஏபி மாநாட்டில் கூறினார்.
“நான்கு பக்காத்தான் மாநிலங்களிலும் நாம் திறமையாக செயல்பட்டுள்ளது அது பொய் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்காத்தான் மாநிலமும் நொடித்துப் போகவில்லை. உண்மையில் பெரிய அளவில் உபரிகளை வைத்துள்ளன,” என்றார் அவர்.
பக்காத்தான் வெற்றி இஸ்லாமிய நாட்டுக்கு வழி வகுத்து விடும் என்று மசீச-வும் கிறிஸ்துவ நாட்டுக்கு வழிகோலி விடும் என அம்னோவும் கூறிக் கொள்வது இரண்டாவது மாயை என லிம் சொன்னார்.
“மசீச-வும் அம்னோவும் கூறுகின்ற அந்தப் பொய்கள் உண்மையில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. பக்காத்தான் பொதுக் கொள்கையில் கிறிஸ்துவ நாடு அல்லது இஸ்லாமிய நாடு பற்றிக் குறிப்பிடப்படவே இல்லை.”
பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் மே13 சம்பவத்தைப் போன்ற பெரிய இனக் கலவரம் மூளும் என்பது மூன்றாவது மாயை என லிம் தெரிவித்தார்.
மலாய் வாக்காளர்களுடைய ஆதரவுடன் மட்டுமே மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற சூழ்நிலை இருக்கும் போது அந்த மருட்டல்கள் உண்மையில் மலாய்க்காரர் அல்லாதாரை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் அவர்.
“மலாய் வாக்காளர்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதை 2008 பொதுத் தேர்தல்கள் காட்டியுள்ளன. ஐந்து மாநிலங்களில் அரசாங்க மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் இனக் கலவரங்கள் ஏதும் நிகழவில்லை.”
“மூன்று பெர்சே பேரணிகளிலும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் பெரும்பான்மையாக இருந்த மலாய்க்காரர்கள் தூய்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்பியது தெளிவாகத் தெரிந்தது,” என்றார் அவர்.
நம்பிக்கை உள்ளது
பிஎன் இன உணர்வுகளை பரவலாகத் தூண்டி விட்ட போதிலும் இரண்டு அண்மைய நிகழ்வுகள் இந்த நாடு இனவாத கூண்டிலிருந்து வெளிவர முடியும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது என்றும் லிம் சொன்னார்.
வட்டாரப் பாடல் போட்டியான Asian Wave 2012ல் ஷீலா அம்சா மகத்தான வெற்றி பெற்றது முதலாவது நிகழ்வாகும்.
ஷீலா ஆசிய நாடுகளைச் சேர்ந்த 12 இதர போட்டியாளர்களை இறுதிச் சுற்றில் தோற்கடித்து அந்த விருதைப் பெற்றுள்ளார்.
மண்டரின் உட்பட மூன்று மொழிகளில் அவர் பாடியது ஷாங்காய் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து விட்டது.
“சீன ரசிகர்களுக்கு முன்னால் சீன மொழிப் பாடல் ஒன்றைப் பாடி மற்ற சீனப் பாடகர்களை ஒரு மலாய்க்காரர்கள் தோற்கடிக்க முடிந்துள்ளதைக் கண்டு மலேசியர்கள் பெருமை கொண்டுள்ளனர்.”
“அது மலாய்க்காரர்கள் அனைத்துலக அளவில் போட்டியிடும் ஆற்றலையும் திறமையும் பெற்றுள்ளதைக் காட்டியது,” என்றார் லிம்.
ஜகார்த்தா ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தலில் முறையே ஜோகோ விடோடோவும் அவருடன் இணைந்து போட்டியிட்ட பாசுக்கி ஜாஹாஜா புர்னாமாவும் வெற்றி பெற்றது இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என அவர் தெரிவித்தார்.
“பாசுக்கி சீனக் கிறிஸ்துவர் என்பதே இதில் முக்கியமான விஷயமாகும். பாசுக்கி-க்கு எதிராக அவரது போட்டியாளர் இனவாத அவதூறுகளை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த போதிலும் பாசுக்கி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.”
“இந்தோனிசியர்கள் தெளிவாக இனவாத அவதூறுகளை நிராகரித்து விட்டனர். திறமைக்கும் ஆற்றலுக்கும் வாக்களித்துள்ளனர்,” என்றும் அவர் சொன்னார்.
“தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழி வகுக்கும் ஆற்றலுக்குச் சாதகமாக இனவாத அம்சங்களை ஏழ்மை நிலையில் உள்ள இந்தோனிசியாவே ஒதுக்க முடியும் என்றால் மலேசியர்கள் அதனை விட நன்றாகச் செய்ய முடியும் என லிம் மேலும் கூறினார்.
“பொருளாதாரத் திறமை கொண்ட, அனைவருக்கும் வளப்பத்தைக் கொண்டு வரக் கூடிய, படித்தவர்கள் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி மாற்றக் கூடிய புதிய அரசாங்கத்தை மலேசியர்கள் தேர்வு செய்து தனது ஊழலையும் நண்பர்களுக்கு உதவும் போக்கையும் மறைப்பதற்கு இன, சமயத் தீவிரவாத உணர்வுகளைத் தூண்டி விடுவதை தொடரும் அரசாங்கத்தை நிராகரிப்பர் என நான் நம்புகிறேன்,” என லிம் தமது உரையை நிறைவு செய்தார்.