நேற்று மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) பொது விசாரணையில் பெர்சே 3.0 பேரணியில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ படமொன்று திரையிடப்பட்டது.
விசாரணைக் குழுவின் செயலக உறுப்பினர் ஒருவர், அது போலீஸ் வழங்கிய வீடியோ படம் என்றார்.
விசாரணைக் குழுத் தலைவர் காவ் லேக் டீ (வலம்) அது போலீசாரின் வீடியோதானா என்பதை உறுதிப்படுத்துமாறு ஏசிபி முகம்மட் சுல்கர்னின் அப்துல் ரஹ்மானைக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு சுல்கர்னின்,“அதை உறுதியாகச் சொல்வதற்கில்லை”, என்றார்.
டாங் வாங்கி ஒசிபிடி-ஆக இருந்தவரும் ஏப்ரல் 28-இல் தேர்தல் சீரமைப்புப் பேரணி நடைபெற்ற டாட்டாரான் மெர்டேகா பகுதிக்குப் பொறுப்பதிகாரியாக இருந்தவருமான சுல்கர்னின் எந்தப் போலீஸ் கூட்டத்திலும் அந்த வீடியோவைப் பார்த்ததில்லை என்றார்.
ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோ, பின்னர் அடையாளம் காணப்படுவதற்காக தனியே எடுத்து வைக்கப்பட்டது.அது உண்மையான வீடியோதான் என்று யாராவது உறுதிப்படுத்தினால் மட்டுமே அது ஒரு சாட்சிப்பொருளாக ஏற்கப்படும்.
பேரணியின் முன்னும் பேரணியின்போதும் நிகழ்ந்தவை சிறுசிறு காட்சிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவின் தொடக்கத்திலும் முடிவிலும் போலீஸ் அடையாளச் சின்னம் காண்பிக்கப்படுகிறது.
காட்சிகள் தரமாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.காட்சிகள் எங்கு பதிவுசெய்யப்பட்டன என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெர்சே தலைவர்கள், மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் டாட்டாரான் மெர்டேகாவுக்கு வருகை புரிதல், ஆர்ப்பாட்டக்காரர்களும் போலீஸ்காரர்களும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்,பேரணிக்குப் பின்னர் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் முதலியவற்றை அந்த வீடியோ காண்பித்தது.
அதில் ஒரு காட்சியில், பெர்சே இயக்கக் குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட், பேரணி வெற்றிபெற்றது என்று அறிவித்து கூட்டத்தினரைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். அவர் நின்ற இடம் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் போலத் தெரிகிறது.
அவர் பேசி முடித்த வேளையில் பின்னணியில் ஒரு போலீஸ் வாகனம் வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் அதன்மீது பாய்ந்து தாக்குகிறார்கள்.
பின்னர்,போலீஸ் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் கிட்டத்தில் காண்பிக்கப்படுகிறது. அதன்மீது பல பொருள்கள் வீசி எறியப்படுகின்றன.
போகப்போக, அதுதான் சோகோ விற்பனை மையத்துக்கு வெளியில் நிகழ்ந்த வெறுக்கத்தக்க சம்பவம் என்பது புலனானது. நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது போலீஸ் கார் மோதிய அச்சம்பவத்தை மலேசியாகினி தளத்தில் காணலாம். http://www.malaysiakini.com/news/196680
‘லோரோங் மஸ்ஜித் இந்தியாவில் நடந்தது’என்று தலைப்பிடப்பட்ட இன்னொரு காட்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களும் போலீஸ்காரர்களும் பொருள்களை எடுத்து ஒருவர்மீது மற்றவர் வீசிக்கொள்கிறார்கள். பின்னர் இரு தரப்பையும் சேர்ந்த சிலர் நிலமையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், டாட்டாரான் மெர்டேகாவில் தடுப்புகள் உடைத்தெறியப்படுவதற்குமுன் ஏதோ சைகை காட்டுவதும் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
சில காட்சிகளில், கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக நடந்துசெல்லும்போது அந்தப் பக்கமாக சென்றுகொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் அவர்களைக் கன்னத்தில் அறைகிறார்கள், காலால் உதைக்கிறார்கள்.ஒரு காட்சியில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைப் போலீஸ் அதிகாரிகள் அடித்துக்கீழே தள்ளும்போது காமிரா வேறு பக்கம் நகர்கிறது.
நிறையவே தணிக்கை செய்யப்பட்டுள்ளது
அவ்விசாரணையில் இருந்த பெர்சே பார்வையாளர் டேனியல் அல்பர்ட், அந்த வீடியோவில் நிறைய வெட்டிஒட்டும் வேலை நடந்திருப்பதாகக் கூறினார்.
“விசாரணையில் சாட்சியம் அளித்த பலர் போலீஸ் முரட்டுத்தனம் பற்றி நிறையவே கூறியுள்ளனர்.
“ஆனால், வீடியோ எந்த இடத்திலும் போலீஸ் முரட்டுத்தனத்தைக் காண்பிக்கவில்லை.அது முழுக்க முழுக்க போலீசுக்கே சாதகமாக இருப்பது தெளிவு”, என்றார்.
பின்னர், சுல்கர்னினைக் குறுக்கு விசாரணை செய்த அல்பர்ட்,போலீஸ் முரட்டுத்தனத்தைக் காண்பிக்கும் 10வீடியோ காட்சிகளைத் திரையிட்டுக் காண்பித்தார்.
“அவற்றிலிருந்து (போலீசார்) அவர்களுக்கிடப்பட்ட உத்தரவின்படி நடந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது”, என்றார்.சுல்கர்னின் (இடம்) இந்த வீடியோக்களை எடுத்துச் சென்று போலீஸ் கட்டொழுங்குக் குழுவிடம் கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்று அல்பர்ட் கேட்டுக்கொண்டார்.
சுஹாகாமின் விசாரணை அக்டோபர் 8-இல் தொடரும்.