மூடப்பட்டது மனிக்பாம் முகாம்; மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை!

இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போரினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்கட்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பிலும், சிவில் அதிகாரிகளின் நிர்வாகத்திலும் இயங்கிவந்த இந்த முகாமில் கடைசியாக எஞ்சியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் மற்றும் கேப்பாப்பிலவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 361 குடும்பங்களை 50 பேரூந்துகளில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தார்கள்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்படுவதையடுத்து அங்கு கடைசியாக மிஞ்சியிருந்தவர்களில் மந்துவில் பகுதிக்கு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.

அதேவேளை, தமது சொந்தக் கிராமத்திற்கே செல்ல வேண்டும் என்பதற்காகப் போராடி வந்த கேப்பாப்பிலவு பகுதி மக்களுக்கு அந்தச் சந்தரப்பம் கிடைக்கவில்லை. அவர்களை வேறிடத்தில் குடியேற்றப்போவதாக அதிகாரிகள் அறிவித்திருப்பதையடுத்து, அவர்கள் மிகவும் கவலையடைந்திருக்கின்றார்கள்.

கேப்பாப்பிலவு பகுதி மக்களின் கவலைகளைச் சுட்டிக்காட்டி, அந்தப் பகுதி மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு வழிசெய்யலாமே என வன்னி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா அவர்களிடம் கேட்டபோது, தேசிய பாதுகாப்பை முன்னிட்டு, அதனை இப்போது செய்ய முடியாதிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

மனிக்பாம் முகாம் மூடப்படுவதையடுத்து உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் உறவினர் நண்பர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத முகாம்களில் இருப்பதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இடம்பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் இன்னும் அவர்களது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாதிருக்கின்றனர் என்ற சரியான அதிகாரபூர்வமான தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

TAGS: