இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்றத்திற்கு முஸ்லிம்கள் நால்வரும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறை தமிழர்கள் எவருக்கும் மாநில சட்டமன்றத்தில் அமைச்சர் பொறுப்பு கிடைக்கவில்லை.
37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாநில சட்டமன்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் ஆதரவுடன் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
22 உறுப்பினர்களை கொண்டுள்ள ஆளும் தரப்பில் 14 பேர் முஸ்லிம்கள் , 6 பேர் சிங்களவர்கள், 2 பேர் தமிழர்கள் ஆவர்.
கடந்த முறை மாநில சட்டமன்றத்தில் தமிழர் தரப்பில் முதலமைச்சரும் அமைச்சர் ஒருவரும் இருந்தனர். முஸ்லிம் தரப்பில் இரண்டு அமைச்சர்களும் சிங்கள தரப்பில் ஒரு அமைச்சரும் இருந்தனர்.
அதேசமயம் ஆளும் தரப்பில் 7 தமிழர்கள் அங்கம் பெற்றிருந்தார்கள் ஆனால் இம்முறை இருவர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை முதலமைச்சராக இருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அமைச்சர்கள் வாரியத்தில் அமைச்சராக பதவி வகிக்க விரும்பவில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதேவேளை மூவின மக்களும் வாழும் மாகாணம் என கருதப்படும் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படாதது குறித்து பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் கவலை வெளியிடப்பட்டுகிறது.