‘என்னைப் பற்றிய உங்கள் எண்ணம் மாறியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது அந்த கோடீஸ்வரரை முதன் முறையாகச் சந்திப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமயங்களுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜகார்த்தாவுக்குச் சென்றிருந்த கொடை வள்ளலான சோரோஸை 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட போது, 1997-98 வட்டார நிதி நெருக்கடியை சமாளிக்க மலேசிய பிரதமர் எடுத்த நடவடிக்கைகளை தாம் ஒப்புக் கொள்வதாக சோரோஸ் கூறியதை மகாதீர் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.
அதற்கு நான்கு நாள் கழித்து பெரிதும் தூற்றப்பட்ட நாணய ஊக வணிகரான சோராஸை தமது உலக அமைதித் திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை மகாதீர் அவருக்கு எழுதியிருந்தார். அனைத்துலகப் பூசல்களைத் தீர்ப்பதற்கு சண்டையை ஒரு வழியாகப் பயன்படுத்துவதையும் அதனைத் தொடங்குவதையும் கிரிமினல் குற்றமாக்கி சட்ட விரோதமாக்குவது அந்த அமைதித் திட்டத்தின் நோக்கமாகும்.
“உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற இறுதி மனித உரிமைகளை அடையும் முயற்சிக்கு உங்கள் பெயரைத் தந்து உதவுமாறு அழைப்பதற்கு நான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.”
அவர்கள் இருவரும் இப்போது 80 வயதைத் தாண்டி விட்டனர். மகாதீருக்கு 87, சோரோஸுக்கு 82- ஆசிய நிதி நெருக்கடியின் போது இருவரும் கசப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். சோரோஸ் ‘குழப்பத்தை’ ஏற்படுத்திய ‘கயவர்’ என்று மகாதீர் கூறினார். மலேசியப் பிரதமர் ‘தமது நாட்டுக்கு ஆபத்தானவர்’ எனச் சோரோஸ் திருப்பித் தாக்கினார்.
மலேசியாகினியிடம் ஒரு பிரதியுள்ள அந்தக் கடிதம், சோரோஸுக்கு சமாதானக் கரத்தை முதலில் நீட்டியது மகாதீர் என்பதை உணர்த்தியது.
ஈராக் போர் மீதான சோரோஸ் கருத்துக்கள் மகாதீரை கவர்ந்திருக்க வேண்டும். 2004ம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் மீண்டும் அதிபராகத் தெரிவு செய்யப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு சோரோஸ் நிதி உதவி செய்தார்.
“நமது வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் போர் குறித்து நாம் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உதாரணம்: ‘தேசிய நோக்கத்தை அடைவதற்காக மக்களைக் கொல்வது’ என்றார் மகாதீர்.
மகாதீர் வழி நடத்தும் பெர்டானா தலைமைத்துவ அற நிறுவனம் 2005ம் ஆண்டு ஏற்பாடு செய்த ஒர் அனைத்துலகக் கருத்தரங்கில் உலக அமைதி ஆய்வரங்கு தோற்றுவிக்கப்பட்டது.
“போரை ஒரு குற்றமாக்கவும் போர் கொலையிலிருந்து மாறுபட்டதல்ல என உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவும் அந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது,” மகாதீர் சோரோஸிடம் கூறினார்.
‘அதனை நாம் ஒரே நாளில் செய்து விட முடியாது. அதற்குப் பல ஆண்டுகள் பல தசாப்தங்கள் ஏன் பல நூற்றாண்டுகள் கூடப் பிடிக்கலாம். என்றாலும் அந்தப் பயணத்துக்கான முதல் அடியை இப்போது எடுத்து வைக்க வேண்டும். அந்த மாற்றத்தைக் காண நீங்களும் நானும் உயிரோடு இருக்க மாட்டோம். ஆனால் யாரும் அதனை நிறுத்தக் கூடாது.”
உலக அமைதி ஆய்வரங்கில் சோரோஸ் பங்கு கொள்வது அவருடைய கொடை நடவடிக்கைகளைப் பாதிக்காது என்று அவருக்கு உறுதி அளிக்கவும் சோரோஸ் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்.
“உங்களுடைய மற்ற பணிகள் – அதாவது ஜனநாயகம் பற்றி எனக்குத் தெரியும். இறுதி மனித உரிமைக்கான இந்த போர் எதிர்ப்பு இயக்கம் நீங்கள் வலியுறுத்துகின்ற மற்ற உரிமைகளுக்கும் முரணாக இருக்காது. ஆகவே நீங்கள் அதில் இணைந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.”
சோரோஸ், மகாதீருக்கு என்ன பதில் அளித்தார் என்பது தெரியவில்லை. என்றாலும் அது ‘முடியாது’ என்பதாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் சோரோஸ் உலக அமைதி ஆய்வரங்கில் இணையவே இல்லை.
மகாதீர் சோரோஸைக் கோலாலம்பூரில் 11 மாதங்களுக்குப் பின்னர் சந்தித்தார். அப்போது இரண்டு எதிரிகளும் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டனர்.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மலேசிய நாணய மதிப்பு குறைந்ததில் சோரோஸ் சம்பந்தப்படவில்லை என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக மகாதீர் சொன்னார்.
ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் அந்த வேறுபாட்டுக்கு மகாதீர் மீண்டும் உயிர் கொடுத்தார். சில அரசு சாரா அமைப்புக்கள் அனைத்துலக நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவிகளைப் பெறுவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சோரோஸ் மலேசியாவில் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சி செய்வதாக இன்னொரு குற்றச்சாட்டை மகாதீர் சுமத்தியுள்ளார்.