“நான் சொல்வதை வைத்து என்னை எடை போட வேண்டாம், நான் செய்வதை வைத்து தீர்ப்புக் கூறுங்கள்” என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டச் சீர்திருத்தங்கள் வழி தாம் பல முனைகளில் மனித உரிமைகளை நிலை நிறுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
நஜிப் இன்று காலை கோலாலம்பூரில் அனைத்துலக சட்ட மாநாட்டு ஒன்றைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
“மென்மேலும் திறந்த துடிப்புமிக்க ஜனநாயகத்தை” வழங்குவதற்கு தமது நிர்வாகம் ‘சொன்னதைச் செய்யுள்ளதற்கு பல எடுத்துக்காட்டுக்களையும் அவர் காட்டினார்.
“நாங்கள் மூன்று அவசர காலச் சட்டங்களை ரத்துச் செய்துள்ளோம். அதனால் மனித உரிமைகளுக்கு நட்புறவான சட்டச் சூழல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டம், நாடு கடத்தும் சட்டம் ( Banishment Act ) ஆகியவற்றையும் அகற்றியுள்ளோம்,” என நஜிப் தமது உரையில் குறிப்பிட்டார்.
தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்யவும் தான் எண்ணியிருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது என்றார் அவர்.
மக்கள் அரசாங்கத்தை ‘ஆக்கப்பூர்வமாக குறை கூறுவதையும்’ அரசாங்கம் அனுமதித்துள்ளதாகவும் நஜிப் கூறிக் கொண்டார்.
“நாங்கள் மக்களுக்கு மேலும் சிறந்த பேச்சு, எழுத்து சுதந்திர உரிமைகளை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளோம். அச்சுக் கூட வெளியீட்டுச் சட்டத்தையும் திருத்தியுள்ளோம்.”
“நாங்கள் போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவை அகற்றி ஒன்று கூடும் சட்டத்தை அறிமுகம் செய்ததின் மூலம் ஒன்று கூடுவதற்கு அனைவருக்கும் உள்ள உரிமைகளையும் நிலை நாட்டியுள்ளேம்,” என்றும் பிரதமர் கூறினார்.