இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமான வழியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 37 இலங்கைத் தமிழர்கள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்று எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அத்தலூரி தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக இருந்த இவர்கள், சட்டவிரோதமான முறையில் சில முகவர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த வேளையில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் மேலும் கூறுகிறார்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்துள்ள ஏழு பேர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன என்றும், ஒரு முகவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் ஹர்ஷித்த அத்தலூரி தெரிவிக்கிறார்.
இந்த 37 பேர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த படகும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மிகவும் அடிப்படை வசதிகளை கொண்ட படகு என்றும் அதில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதாகவே இருக்கும் எனவும் எர்ணாகுளம் புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்த 37 பேரை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக உறுதியளித்த முகவர்களில் ஒரு இலங்கைத் தமிழரும் அடக்கம் எனவும் கூறும் காவல்துறையினர், இதில் மூன்று இந்தியர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.