லண்டன்: முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி மன்னிப்பு கேட்க வைத்தார் சீக்கிய பெண் ஒருவர்.
அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து ஆண் போன்று தோற்றம் அளித்தார்.
பொருள் வாங்க வரிசையில் நின்ற அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த வாலிபர் ஒருவர், அப்படத்தை ‘ரெட்டிட்’ இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்தார். தனது படத்தை இணையதளத்தில் எதேச்சையாக பல்பிரீத் பார்க்க நேர்ந்தபோது, அவர் கோபப்படவில்லை. புகைப்படத்தை வெளியிட்ட வாலிபரின் அநாகரீக வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “ஆம். முகத்தில் முடி வளர்ந்த சீக்கிய பெண் நான். இதனால், நான் ஆணா? பெண்ணா? என பலர் குழம்பிப் போய் விடுகின்றனர். எனது தோற்றத்தை கண்டு வருத்தப்படவில்லை. அவமானப்படுவதாக கருதவும் இல்லை” என, அதே இணையதள பக்கத்தில் பொறுமையாக பதில் தந்தார் ல்பிரீத்.
அதோடு நிற்காமல், “புகைப்படம் எடுத்தவர், என்னை நேரடியாக கேட்டிருந்தால் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பேன். இதன் மூலம், நான் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் என்னை காண்போர், ‘ஹலோ’ சொன்னால் சந்தோஷப்படுவேன்” என நட்புடன் கூறினார்.
சாதாரணமாக பார்த்தாலே, “என்ன, முறைக்கிறாய்?” எனக் கேட்டு, சண்டை போடத் தயாராக இருக்கும் உலகத்தில், தன்னை இகழ்ந்தவனுக்கு எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார் இந்த பெண் என பல்பிரீத்துக்கு ஏகப்பட்ட விசிறிகள் இணையதளத்தில் உருவாகி விட்டனர்.
பல்பிரீத்தின் நல்ல குணத்தை பாராட்டி, இணையதளத்தில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர் முகத்தில் முடி வளர்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதையும் அதற்கு தீர்வாக என்ன செய்யலாம் என்பதையும் அன்பு மேலீட்டால் சிலர் கருத்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு பதில் அளித்த பல்பிரீத், “ஹார்மோன் குறைபாட்டால்தான் முகத்தில் முடி வளர்கிறது; சிகிச்சைக்கு பின், ஹார்மோன் குறைபாடு சரியாகி விட்டது; ஆனால், முகத்தில் வளர்ந்த முடி அப்படியேதான் இருக்கிறது; இதற்கு வருத்தப்படவில்லை. துரதிருஷ்டவசமாக நினைக்கவும் இல்லை’ எனத் தெரிவித்தார்.
அண்மையில் பல்பிரீத்துக்கு இணையளத்தில் ‘ஹலோ’ சொல்லி இருப்பது புகைப்படத்தை வெளியிட்ட அதே வாலிபர். இம்முறை அவர் கிண்டலடிக்கவில்லை; மாறாக வாலிபர் கேட்டது ‘மன்னிப்பு’.