நீண்ட காலத்திற்குப் பின்னர் ஹிண்ட்ராப்- பிகேஆர் சந்திப்பு நிகழ்ந்தது

2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப்பும் பிகேஆரும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளன.

ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் கடந்த வாரம் கோலாலம்பூரில் பல பிகேஆர் தலைவர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என பிகேஆர் தலைமைச் செயலாளரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான அப்துல் காலித் இப்ராஹிம் கூறினார்.

புரிந்துணர்வையும் வழி வகைகளையும் உருவாக்குவதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறோம். நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு அந்தச் சந்திப்பு உதவியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

“நான் அந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமானது என எண்ணுகிறேன். மலேசிய மக்களுக்கு தேவையான நிலையை நாம் அடைய வேண்டும்.”

பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன், உதவித் தலைவர் தியான் சுவா, சுபாங் எம்பி ஆர் சிவராசா ஆகியோர் சந்திப்பில் பங்கு கொண்ட மற்ற பிகேஆர் தலைவர்கள் ஆவர்.

ஹிண்ட்ராப்பின் தலைமைப் பொறுப்பை தமது சகோதரர் பி உதயகுமாரிடமிருந்து ஏற்றுக் கொண்ட பி வேதமூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தக் கூட்டம் நடைபெற்றது.

2008ம் ஆண்டு தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவாக மலேசிய இந்தியர்களைத் திரட்டுவதில் ஹிண்ட்ராப் முக்கியப் பங்காற்றியது.

ஆனால் பக்காத்தான் பல மாநிலங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பிஎன் பெரும்பான்மையைக் குறைத்த பின்னர் ஏழ்மையிலுள்ள இந்தியர்களுடைய தேவைகளை கவனிக்கத் தவறி விட்டதாக உதயகுமார் குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான், பிஎன் வேட்பாளர்களுக்கு எதிராக தனது அரசியல் பிரிவான மனித உரிமைக் கட்சி வழி போட்டியிடப் போவதாக ஹிண்ட்ராப் அறிவித்த பின்னர் பிகேஆர்-ஹிண்ட்ரால் உறவுகள் மேலும் கசப்படைந்தன.

CJ VIDEO