பினாங்கை மீண்டும் கைப்பற்ற அம்னோவின் 3-3-3-1 வழி முறையை டிஏபி சாடுகின்றது

13வது பொதுத் தேர்தலில் பினாங்கு சட்டமன்றத்தில் தனக்கு தற்போது உள்ள 11 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மாநில அரசை பிஎன் மீண்டும் கைப்பற்ற அம்னோ வழங்கியுள்ள 3-3-3-1 வழி முறையை பினாங்கு டிஏபி சாடியுள்ளது.

பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான் 2008ல் எந்தத் தொகுதியும் கிடைக்காமல் போன நிலையை உடைக்க வேண்டும் என கூறிக் கொண்டுள்ள வேளையில் பிஎன் ‘இரட்டை நாக்குடன்’  பேசுவதாக மாநில டிஏபி சோஷலிச இளைஞர் தலைவர் இங் வெய் எய்க் கூறினார்.

பிஎன் உறுப்புக் கட்சிகள் பினாங்கை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் ஒன்றிணைந்திருக்கலாம். ஆனால் வெவ்வேறு சமூகங்களிடம் அவை “வெவ்வேறு விதமாக பேசுகின்றனர்,” என மாநில முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளருமான இங் சொன்னார்.

“மறைமுகமாக கெரக்கான் அனுதாபத்தைத் தேட முயலுகிறது. அம்னோ அதிகமான இடங்களை வெல்வதற்கு உதவுவதே அதன் நோக்கம். மக்கள் அதனை நம்ப மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.”

கொம்தார் சட்டமன்ற உறுப்பினருமான இங் இன்று நிருபர்களிடம் பேசினார்.

“பினாங்கை நாங்கள் ஆட்சி செய்யும் நான்கு ஆண்டுகளில் பிஎன் நல்ல எதிர்க்கட்சியாகக் கூட விளங்கவில்லை என நாங்கள் எண்ணுகிறோம். ஆக்கப்பூர்வமான எதிர்த்தரப்பாக அது விளங்கத் தவறி விட்டது. அம்னோவைப் போன்று ஆதாரம் இல்லாமல் அவதூறுகளை வீசும் போக்கை கெரக்கானும் பின்பற்றுகிறது,” என்றார் அவர்.

டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் ஊழலானவர், லஞ்சங்களை பெற்றுக் கொண்டுள்ளார் என பிஎன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக எந்த ஆதாரத்தையும் அது வழங்கவே இல்லை என்றும் இங் சொன்னார்.

ஆகவே அது நல்ல எதிர்க்கட்சி என்பதற்கும் தகுதி பெறவில்லை. பிஎன் சரியான பங்கை ஆற்றியிருந்தால் அது ம்க்களுக்கு நன்மை தரும் மேம்படுத்தப்பட்ட கொள்கைகளை பரிந்துரை செய்திருக்கும்.

“பினாங்கை மீண்டும் கைப்பற்ற அது தொடர்ந்து இனவாத உணர்வுகளைத் தூண்டி வருகின்றது அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. பக்காத்தானை ஆதரிக்கும் மக்கள் தொடர்ந்து எங்களை ஆதரிப்பர் என நாங்கள் நம்புகிறோம்,” என இங் குறிப்பிட்டார்.

13வது பொதுத் தேர்தலில் பினாங்கை மீண்டும் கைப்பற்றுவதற்கு அம்னோ உதவித் தலைவரான அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ள 3-3-3-1 வழிமுறை பற்றி இங் கருத்துரைத்தார்.

சட்டமன்றத்தில் இப்போது தனக்கு உள்ள 11 இடங்களை அம்னோ தக்க வைத்துக் கொண்டு அம்னோ, கெரக்கான், மசீச ஆகியவை மூன்று இடங்களையும் மஇகா ஒர் இடத்தையும் வெல்வது அந்த வழிமுறை ஆகும்.

அதனை சாதிக்க முடியுமானால் ஒர் இடம் பெரும்பான்மையில் பினாங்கில் பிஎன் அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என தற்காப்பு அமைச்சருமான அகமட் ஸாஹிட் கருதுகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க பிஎன் 2008ல் தனக்கு ஏற்பட்ட தோல்விகளை சரி செய்வதற்குக் கடுமையாக முயன்று வருகின்றது. அந்தத் தேர்தலில் பிஎன் -னுக்கு மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 11 இடங்கள் மட்டுமே கிடைத்தன. டிஏபிக்கு 19 இடங்களும் பிகேஆர் கட்சிக்கு 9 இடங்களும் பாஸ் கட்சிக்கு ஒர் இடமும் கிடைத்தன.

 

TAGS: